சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் நான் அல்ல: விஜய்யை சீண்டிய உதயநிதி
சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் நான் அல்ல: விஜய்யை சீண்டிய உதயநிதி
ADDED : செப் 26, 2025 06:48 PM

சென்னை; வாரத்தில் 5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் அல்ல என்று துணை முதல்வர் உதயநிதி, தவெக தலைவர் நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;
தமிழகம் முழுக்க 1 கோடியே 20 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 2023ம் ஆண்டு ஆரம்பித்த திட்டம், இப்போது 2025 செப்டம்பர் மாதம் ஆகிவிட்டது. ஒவ்வொரு மகளிருக்கும் 24 ஆயிரம் ரூபாய் முதல்வர் கொடுத்துள்ளார்.
நான் பல மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறேன். வாரத்தில் 4, 5 நாட்கள் வெளியில் சுற்றுகிறேன். நான் வெறும் சனிக்கிழமை, சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் நான் அல்ல. ஞாயிற்றுக்கிழமை கூட வெளியில் சுற்றிக் கொண்டு இருப்பேன். இன்றைக்கு என்ன கிழமை என்று கூட தெரியாது.
நான் பல மாவட்டங்களுக்கு போகும் போது மக்கள் கூட்டமாக நிற்பார்கள். வண்டியை நிறுத்தச் சொல்வேன். மனுக்களோடு நிறைய பேர் வருவார்கள், வாழ்த்துவார்கள். தம்பி..அப்பாவிடம் சொல்லிவிடு. ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது, தேங்க்ஸ் என்று கும்பல், கும்பலாக வந்து சொல்லிவிட்டு செல்வார்கள்.
ஆயிரம் ரூபாயை என்ன செய்வீர்கள் என்று நான் அவர்களிடம் கேட்பேன், 90 சதவீதம் பேர் மருத்துவச் செலவுக்கு பயன்படுகிறது, மாத்திரை வாங்குகிறேன், பேரன், பேத்தி கல்வி செலவுக்கு பயன்படுகிறது என்று சொல்கின்றனர்.
சிலர் வரவில்லை, எதனால் என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று கூறுவார்கள். நிச்சயம் சொல்கிறேன், முதல்வர் சில விதிகளை தளர்த்திவிட்டார். இன்னும் இரண்டு மாதங்களில் கூடுதலாக தகுதி வாய்ந்த நிறைய மகளிருக்கு உரிமை தொகையை முதல்வர் கொடுப்பார்.
இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி பேசினார்.