வேலைவாய்ப்பு என மோசடி: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு
வேலைவாய்ப்பு என மோசடி: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு
ADDED : செப் 26, 2025 07:04 PM

சென்னை: வேலைவாய்ப்பு என்ற போலியான அறிவிப்புகளை நம்ப வேண்டாம், ஆட்சேர்ப்பு மேற்கொள்ள எந்த தனிநபர் அல்லது நிறுவனத்தை அங்கீகரிக்கவில்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு என்று முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நேர்மையற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் போலியான வேலைவாய்ப்புகளை வெளியிடுவது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இது ஒரு தவறான, போலியான ஆட்சேர்ப்பு அறிவிப்பு என்பதால் பொதுமக்கள் இதில் இருந்து விலகி இருக்க வேண்டும். ஆட்சேர்ப்பு மேற்கொள்ள எந்த தனிபர் அல்லது நிறுவனம் அங்கீகரிக்கவில்லை.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அனைத்து ஆட்சேர்ப்பு நியமனங்களும் கடுமையான தேர்வு செயல்முறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. விண்ணப்பதாரர்களுக்கான அனைத்து தகவல்களும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரி அல்லது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட லெட்டர் பேடில் இருந்து வெளிவர வேண்டும்.
மாறாக, Rediff mail, yahoo, Gmail அல்லது மொபைல் லைன் அல்லது What's App அல்லது போலி CMRL லெட்டர் ஹெட் அல்லது ஏஜென்சி போன்ற இணைய முகவரியிலிருந்து வரக்கூடாது. வேலை காலியாக உள்ளது என்ற அறிவிப்பு CMRL அதிகாரப்பூர்வமாக URL வழியாக அறிவிக்கப்படும்.
சில தருணங்களில் உள்ளூர்/தேசிய நாளிதழ்களில்(ஆங்கிலம், தமிழ் இரண்டிலும்) வேலை வாய்ப்பு செய்திகளில் வெளியிடப்படும். வேலை வாய்ப்புக்காக, பணம் வசூலிக்க எந்த முகவர் அல்லது நிறுவனத்தையும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை. வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் என்று பணம் கோருவது மோசடியானது மட்டுமல்ல சட்ட விரோதமானதும் கூட.
அங்கீகரிப்படாத எந்தவொரு போலி நியமனக்கடிதத்திற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பொறுப்பாகாது. போலி செய்திகளை பரப்பும் நபர்கள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலியான நிறுவனம் அல்லது தனிநபர் மூலம் ஏற்படும் எந்த இழப்புகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பொறுப்பேற்காது.
இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதில் தெரிவித்துள்ளது.