விஜயின் சனிக்கிழமை பிரசாரம் கிண்டலடிக்கும் உதயநிதி
விஜயின் சனிக்கிழமை பிரசாரம் கிண்டலடிக்கும் உதயநிதி
ADDED : செப் 27, 2025 05:53 AM

சென்னை: ''சனிக்கிழமைகளில் மட்டும் வெளியே வந்து, மக்களை சந்திக்கும் வழக்கம் எனக்கு இல்லை,'' என, த.வெ.க., தலைவர் விஜயை, துணை முதல்வர் உதயநிதி சாடினார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், சென்னை வேப்பேரியில், 'முன்னேற்றப் பாதையில் முப்பெரும் விழா' பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
அதில், துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
நான், பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வேன். வாரத்திற்கு, 4 அல்லது 5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். சனிக்கிழமைகளில் மட்டும் வெளியே வந்து மக்களை பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை.
ஞாயிற்றுகிழமை கூட வெளியே தான் சுற்றிக் கொண்டு இருப்பேன். நான் கிழமைகளை பார்ப்பது கிடையாது. சிலரால் சனிக்கிழமை பிடிக்காமல் போகிறது.
நான் வெளியூர்களுக்கு செல்லும்போது, பெண்கள் பலர் மனுக்கள் வழங்குவர். நான் இளைஞரணி செயலராக இருந்தபோது, கொஞ்சம் மனுக்கள் வரும்.
இப்போது துணை முதல்வராக இருப்பதால், என்னுடைய காரில், மனுக்கள் வைக்க இடமில்லை. இருந்தாலும், மனுக்களை பெற்று, அவர்களிடம் பேசுவேன். சிரித்த முகத்துடன் என்னை வரவேற்பர்.
குறிப்பாக மாதத்தின், 14, 15, 16ம் தேதிகளில் சென்றால், தைரியமாக செல்லலாம். அப்போதுதான், வங்கியில் மகளிர் உரிமை தொகை வந்தடையும்.
அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, 'பா.ஜ.,வுக்கு தான் நன்றியுடன் இருப்பேன்' என்கிறார்.
நன்றியை சொல்ல யாராவது, 4 கார் மாறி செல்வரா? அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகம், சென்னை ராயப்பேட்டையில் இருக்கிறது என நினைக்கிறோம். ஆனால், அது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வீட்டில் உள்ளது.
அ.தி.மு.க.வில் பல்வேறு அணிகள் உள்ளன. தற்போது, புதிதாக ஜெயலட்சுமி அணி என, ஒன்று உருவாகி உள்ளது. அந்த பெண், ஜெயலலிதாவின் வாரிசு என கூறுகிறார். முகச் சாயலும் அவரை போல்தான் இருக்கிறது.
தமிழக அரசியலில் புதிதாக சில கட்சிகள் வந்துள்ளன. கொள்கை என்றால் என்ன என்று, அக்கட்சிகள் கேட்கின்றன. அந்த கட்சிகளை சேர்ந்த இளைஞர்களிடம், தி.மு.க.வின் கொள்கை குறித்து, நம் கட்சியினர் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.