ADDED : செப் 27, 2025 06:18 AM

தமிழக காவல் துறையில், 2022ல் பணியில் சேர்ந்த போலீஸ்காரர்களுக்கு, மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்படாததால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில், 2022ல், 9,700 பேர் கான்ஸ்டபிள்களாக பணியில் சேர்ந்தனர்.
இவர்களின் ஊதியத்தில் இருந்து மாதம் 300 ரூபாய், இன்சூரன்ஸ் கட்டணமாக பிடிக்கப்படுகிறது. ஆனால், இதுநாள் வரை மருத்துவ காப்பீடு அட்டையோ அல்லது காப்பீட்டுக்கான எண்களோ, அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது ஏதேனும் விபத்தில் சிக்கினாலோ, காப்பீடு அட்டை இல்லாததால், தங்களின் சொந்த செலவில் தான் அவர்கள் சிகிச்சை பெற வேண்டி உள்ளது.
இதுகுறித்து, போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:
கடந்த, 2022ம் ஆண்டு பணியில் சேர்ந்த போலீஸ்காரர் அனைவரும், 'நேஷனல் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த அட்டை வாயிலாக, தமிழகத்தில் எந்தெந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மூன்று ஆண்டுகளாகியும் எங்களுக்கு மட்டும் காப்பீடு அட்டை வழங்கவில்லை. இதனால், இலவச சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காப்பீடு அட்டையை, யாரிடம் கேட்பது என்பது கூட தெரியாமல் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினர்.
- நமது நிருபர் -