'தி.மு.க., நாடக கம்பெனியின் நடிப்பு எரிச்சலுாட்டுகிறது'
'தி.மு.க., நாடக கம்பெனியின் நடிப்பு எரிச்சலுாட்டுகிறது'
ADDED : செப் 27, 2025 05:13 AM

சென்னை : 'தி.மு.க., அரசின் சத்துணவு திட்டத்தை கண்டு அதிசயிக்கும் தி.மு.க., தலைவர்கள், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்து, அங்கு வழங்கப்படும் உணவை உண்பரா' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
அழுகிப்போன முட்டை, புழு பூச்சி நெளியும் குடிநீர், பல்லி விழுந்த உணவு என, நாளுக்கு நாள் பிள்ளைகளுக்கு சாவு பயத்தை காட்டிக் கொண்டிருக்கும், சத்துணவு திட்டத்தை புகழ்ந்து, சாம்பாருக்கு சான்று வழங்கி கொண்டிருக்கும் தி.மு.க., அரசின் மடத்தனத்தை என்னவென்று சொல்வது?
தி.மு.க., அரசின் சத்துணவு திட்டத்தை கண்டு அதிசயிக்கும் தி.மு.க., தலைவர்களும், பிரமுகர்களும் தங்கள் வீட்டு பிள்ளைகளை அரசு பள்ளி களில் படிக்க வைப்பரா? அங்கு வழங்கும் சத்துணவை ஒரு வேளைக்காவது உண்பரா?
தி.மு.க., எனும் நாடக கம்பெனியின் நடிப்பானது, எல்லை கடந்து நம்மை எரிச்சலுாட்டுகிறது. தேர்தல் சமயத்தில் வண்ண விளம்பரங்களையும், திரை பிரபலங்களையும் நிறைத்து, பிரமாண்டமாக விழா எடுத்தால், தி.மு.க., அரசின் தோல்விகளை மக்கள் மறந்து விடுவர் என, நினைக்கின்றனர்.
மக்களின் வரிப்பணத்தை வெட்டியாக வாரி இறைக்கும் தி.மு.க., அரசின் அட்டூழியங்கள் ஆபத்தானவை. திராவிட மாடல் எனும் போலி பிம்பத்திற்குள் அடைத்து, தமிழகத்தை அழிவை நோக்கி இழுக்க முயலும் தி.மு.க., அரசின் அத்தனை சதிகளும் முறியடிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.