ADDED : செப் 27, 2025 05:10 AM

சென்னை: பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை, இரு தினங்களுடன் தமிழக பா.ஜ.,வினர் நிறுத்திஉள்ளனர்.
பிரதமர் மோடியின் பிறந்த நாள் கடந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று முதல் வரும் அக்., 2ம் தேதி வரை, இரு வாரங்களுக்கு நாடு முழுதும் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள், துாய்மை பணி உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளுமாறு, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் செப்., 17ம் தேதி தமிழக பா.ஜ.,வினர், கடற்கரையில் துாய்மை பணி, துாய்மை பணியாளர்களுக்கு விருந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினர்; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்.
அதற்கு அடுத்த நாளும் சில இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன.
பா.ஜ., மேலிட தலைவர்கள், இரு வாரங்களுக்கு சேவை பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய நிலையில், தமிழகத்தில் இரு தினங் களுடன் நிறுத்தி விட்டனர்.
பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி, மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்யலாம்.
ஆனால், தமிழக பா.ஜ.,வினர் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். நிறைய செலவாகிறது என்பதால், கட்சி நிர்வாகிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் தவிர்த்து விட்டனர்.
எனவே, அமைப்பு ரீதியாக செயல்படும் 66 மாவட்ட தலைவர்களிடமும், மோடி பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கிய விபரங்களை, அறிக்கையாக மாநில நிர்வாகிகள் கேட்க வேண்டும்.
அதோடு, கட்சி தரப்பில் இருந்தும், நல உதவி திட்டங்களுக்கு ஏதேனும் நிதி உதவி தர வேண்டும். அப்போது தான் பணிகள் வேகமெடுக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.