அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் தயங்குவதன் பின்னணி
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் தயங்குவதன் பின்னணி
ADDED : செப் 04, 2025 04:18 AM

சென்னை: சட்டசபை தேர்தல் வரை அதிகாரப்பூர்வமாக கட்சி பிளவுபடுவதை தவிர்க்கவே, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2024 டிச., 28ல் நடந்த பா.ம.க.. பொதுக்குழுவில், ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் பகிரங்கமாக வெடித்தது. எட்டு மாதங்கள் கடந்தும் இருவரும் சமாதானமாகவில்லை.
கடந்த எட்டு மாதங்களில், அன்புமணிக்கு ஆதரவளிக்கும் மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாநில செய்தி தொடர்பாளர் பாலு ஆகியோரின் கட்சி பதவியை ராமதாஸ் பறித்தார்.
அதன்பின், அன்புமணி ஆதரவாளர்களாக செயல்படுகின்றனர் என்பதற்காக, எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமார், வெங்கடேஸ்வரன், சதாசிவம் ஆகியோரை கட்சியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்தார். புதிதாக 90க்கும் அதிகமான மாவட்டச் செயலர்களை நியமித்தார்.
ஆனால், மகன் அன்புமணி மீது மட்டும் ராமதாஸ் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவர் இல்லாமல், கட்சிக்கு புதிய நிர்வாகக்குழுவை அறிவித்த ராமதாஸ், கடந்த ஜூலை 8ம் தேதி, திண்டிவனம் அருகே ஓமந்துாரில் பா.ம.க., செயற்குழுவை கூட்டினார், அதில், அன்புமணி மீது ராமதாஸ் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், வழக்கம்போல் விமர்சனத்தோடு நிறுத்திக் கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் 17ல் நடந்த பொதுக்குழுவில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுக்கு ஆகஸ்ட் 31க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
அதை தொடர்ந்து, கடந்த 1ம் தேதி நடந்த பா.ம.க., ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்திலும், அன்புமணி மீது நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், பா.ம.க., நிர்வாகக்குழு கூட்டம், தைலாபுரத்தில் நேற்று நடந்தது. இதில், ராமதாஸ், அவரது மகள் ஸ்ரீ காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதிலும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக, நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க, வரும் 10ம் தேதி வரை அன்புமணிக்கு அவகாசம் வழங்கப்பட்டது.
இது தொடர்பாக, ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறியதாவது:
பா.ம.க., கட்சி பெயர், சின்னம், கொடி, தலைமை அலுவலகம் ஆகியவை அன்புமணி கட்டுப்பாட்டில் உள்ளன. தேர்தல் கமிஷனும், அவரது தலைமையை தான் அங்கீகரித்துள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரில், மூன்று பேர் அன்புமணி பக்கம் உள்ளனர்.
எனவே, அன்புமணியை கட்சியை விட்டு நீக்கினால், கட்சி பெயர், கொடி, சின்னம் அனைத்தும் அன்புமணியிடம் சென்று விடும் அல்லது இருவரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். கட்சி அதிகாரப்பூர்வமாக பிளவுபட்டால், யாரும் கூட்டணி அமைக்க முன்வர மாட்டார்கள். கூட்டணி பேரம் நடத்த முடியாது.
அதனால் தான், கூட்டணி இறுதியாகும் வரை அல்லது சட்டசபை தேர்தல் வரை இப்படியே கொண்டு செல்ல, ராமதாஸ் முடிவு செய்துள்ளார். எனவே, அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.