அ.தி.மு.க.,வை 'பதம் பார்க்க' கிளம்பும் செங்கோட்டையன்?
அ.தி.மு.க.,வை 'பதம் பார்க்க' கிளம்பும் செங்கோட்டையன்?
ADDED : செப் 04, 2025 04:10 AM

கோபி: ''என் கருத்துகளை நாளை பிரதிபலிக்க போகிறேன். அவை வலுவானதாக இருக்கும்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாவட்டம், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன், கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில், நாளை மீடியாக்கள் முன்னிலையில் மனம் திறந்து பேசவுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவரின் முடிவால், அ.தி.மு.க.,வில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், கோபி அருகே குள்ளம்பாளையம் பண்ணை வீட்டில் உள்ள செங்கோட்டையனை, அவரது ஆதரவாளர்கள் உட்பட கட்சியினர் தினமும் வந்து சந்தித்து செல்கின்றனர்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த திருப்பூர் முன்னாள் எம்.பி., சத்தியபாமா, செங்கோட்டையனை சந்திக்க அவருடைய பண்ணை வீட்டுக்கு நேற்று காலை 10:10 மணிக்கு வந்தார். செங்கோட்டையனின் நிலைப்பாடு மற்றும் நாளை அவர் தெரிவிக்கும் கருத்து குறித்து சத்தியபாமா அளித்த பேட்டி:
எம்.ஜி.ஆரால் உருவாகிய அ.தி.மு.க., என்ற இயக்கம், அவரது மறைவுக்கு பின், ஜெயலலிதாவால் வழி நடத்தப்பட்டது. அவர் எவ்வாறு வழி நடத்தினார் என்பதை அனைவரும் அறிவர்.
வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை அகற்றிவிட்டு, அ.தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டும். இதற்கு, வெற்றி நம் பக்கம் வந்தாக வேண்டும். அதற்காக, மக்களுக்கு பயனுள்ள காரியங்களை செய்ய வேண்டும்.
செங்கோட்டையன் தெரிவிக்கும் கருத்துகள் ஏற்புடையதாக இருக்கும். அதனால், நாளை செங்கோட்டையன் தெரிவிக்கும் கருத்துகளை நாங்கள் ஆதரிப்போம். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க., சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு தான். இவ்வாறு அவர் கூறினார்.
பண்ணை வீட்டில் இருந்து, தன் ஆதரவாளர்களுடன் நேற்று காலை 10:30 மணிக்கு 'இனோவா' காரில் வெளியே வந்த செங்கோட்டையனை, பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர்.
அப்போது அவர் கூறுகையில், ''கோபி அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தில், நாளை காலை 9:15 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அதற்காக நான் யாரையும் அழைக்கவில்லை. என் உள்ளக் குமுறல் மற்றும் கருத்துகளை பிரதிபலிக்க போகிறேன். கருத்துகள் வலுவானதாக இருக்கும்.
''பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு முன், என்னை சந்திக்க 10,000 பேர் திரண்டு வரப் போவதாக கூறும் செய்தி தவறு. மற்றபடி, என் ஆதரவாளர்கள், அவர்களாக பிரியப்பட்டு என்னை சந்திக்க வந்தால், அதை தடுக்க முடியாது. ஆனால், யாரையும் நான் அழைக்கவில்லை,'' என்றார்.
நாளை, அ.தி.மு.க., குறித்து செங்கோட்டையன், பத்திரிகையாளர்களிடம் என்ன கருத்துகளை கூறினாலும், அவற்றால் அ.தி.மு.க.,வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தத்தான் செய்யும் என, அவருடைய ஆதரவாளர்கள் கூறினர்.