தேச நலனில் அக்கறை இல்லாத ஸ்டாலினுக்கு பா.ஜ., கண்டனம்
தேச நலனில் அக்கறை இல்லாத ஸ்டாலினுக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : செப் 04, 2025 04:40 AM

சென்னை: 'அமெரிக்கா விதித்துள்ள, 50 சதவீத வரியை நீக்க, அதன் நிபந்தனையை ஏற்க சொல்வது அநீதி' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
'குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, குறைந்த விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும், தமிழக ஏற்றுமதியாளர்களை பரிதவிக்க விடுவது நியாயமா' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சிறிதளவும் முதிர்ச்சியில்லாத, பொறுப்பில்லாத, தேச நலனில் அக்கறை இல்லாத, வர்த்தக வியூகம் தெரியாத, ஒரு முதல்வரை தமிழகம் பெற்றிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றால், காங்கிரஸ் -- தி.மு.க., கூட்டணி ஆட்சியில் நடந்தது போல, எண்ணெய் நிறுவனங்கள், கடனில் மூழ்கியிருக்கும்.
இது போன்ற அறிக்கைகள், இந்தியாவை வலுவிழக்க செய்யும் என்பது கூட தெரியாமல், சுயநல அரசியலை முன்னெடுக்கும் முதல்வரை, தமிழகம் பெற்றிருப்பது சாபக்கேடு.
திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, கோவை போன்ற நகரங்களில், தொழிற்சாலைகளை மேம்படுத்த, மற்ற மாவட்ட மக்களின் உழைப்பை உறிஞ்சுவது நியாயமா என்று கேட்டால், அது சரியாகுமா. அப்படித்தான் ஸ்டாலின் கேள்வி உள்ளது.
சென்னையில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனங்கள் கூட, ரஷ்யா கச்சா எண்ணையை பெறுவது ஸ்டாலினுக்கு தெரியுமா? அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை நீக்க, அமெரிக்க அரசின் கட்டளையை, இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்வது அநீதி மட்டுமல்ல, அநியாயமும் கூட. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.