இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவோம்; அமித்ஷா திட்டவட்டம்
இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவோம்; அமித்ஷா திட்டவட்டம்
UPDATED : செப் 03, 2025 04:38 PM
ADDED : செப் 03, 2025 02:45 PM

புதுடில்லி: ''அனைத்து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பாஜ அரசு ஓயாது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சபதம் விடுத்துள்ளார்.
சத்தீஸ்கரில் உள்ள கர்ரேகுட்டா மலையில் 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் சத்தீஸ்கர் மாநில போலீசாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டினார். இது குறித்து அமித்ஷா கூறியதாவது: அனைத்து நக்சல்களும் சரணடையும் வரையும், ஒழிக்கப்படும் வரையும் பாஜ அரசு ஓயாது.
இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது.
ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் காட்டிய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும்.
ஒவ்வொரு மலை பகுதிகளிலும் நக்சலைட்டுகள் ஐஇடி வகை குண்டுகளை மறைத்து வைத்திருந்த போதும், பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு பெரிய நக்சல் முகாம்களை வெற்றிகரமாக அழித்தனர்.
கரேகுட்டா மலையில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடத்தை பாதுாப்பு படையினர் துல்லியமாக அழித்தனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை நக்சலைட்டுகள் சீர்குலைத்தனர். அரசு நலத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தனர்.
நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பலத்த காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதி செய்யவும் பாஜ அரசு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கும்.
2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் மற்றும் துணை முதல்வர் விஜய் சர்மா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.