இந்தியா உடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க ஜெர்மனி விருப்பம்: ஜெய்சங்கர்
இந்தியா உடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க ஜெர்மனி விருப்பம்: ஜெய்சங்கர்
ADDED : செப் 03, 2025 03:25 PM

பெர்லின்: '' இந்தியா உடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க விரும்பும் ஜெர்மனியின் முடிவை பாராட்டுகிறோம்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளார். இதனிடையே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சரான ஜோஹன் வடேபுல்லை சந்தித்து பேசினார்.
பிறகு ஜெய்சங்கர் கூறியதாவது: எங்களின் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. பொருளாதாரம், பருவநிலை மாற்றம், பாதுகாப்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். இந்தியா உடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க விரும்பும் ஜெர்மனியின் முடிவையும், ஏற்றுமதி கட்டுப்பாட்டு விஷயங்களையும் சரி செய்யும் அந்நாட்டின் பாராட்டுகிறோம்.
செமி கண்டக்டர் துறையில் இந்தியாவுடன் ஜெர்மனி ஒத்துழைக்க விரும்புவது வரவேற்கத்தக்கது. பசுமை ஹைட்ரஜன் துறையில் ஒத்துழைக்க இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முக்கியமானது. தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் கூறுகையில், இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு அளிக்கும் என்றார்.