டில்லியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!
டில்லியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!
ADDED : செப் 24, 2025 04:30 PM

புதுடில்லி: டில்லியில் மாணவிகளை பிரபல சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்தசாரதி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கை, தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.
டில்லியின் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தின் இயக்குநரான சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்தசாரதி, 15க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இவர் மீது மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், ஆபாசமான பேச்சு, ஆபாசமான வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் உரையாடல் ஆகிய புகார்களை தெரிவித்தனர்.அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரபல சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி என்கிற பார்த்தசாரதி15க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் மாணவிகளிடம் பேசும் போது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஆபாசமான செய்திகளை அனுப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீசாரிடம் மூன்று நாட்களுக்குள் எப்.ஐ.ஆர்., நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் கோரியுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.