வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சதி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சதி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
UPDATED : செப் 24, 2025 04:30 PM
ADDED : செப் 24, 2025 04:26 PM

பாட்னா: ''வாக்காளர் பட்டியலில் திருத்தத்தில் உள்ள சதி, ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக உள்ளது. விளிம்புநிலை சமூகங்களின் ஓட்டுரிமையை பறிப்பதற்காக அது செய்யப்படுகிறது,'' என காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள பீஹாரில் இன்று செயற்குழுக் கூட்டத்தை காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. காங்கிரசின் செயற்குழுக் கூட்டம் பீஹாரில் கடைசியாக 1940ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பின்னர் தற்போது தான் நடந்தது. கூட்டத்தில் சோனியா, ராகுல், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். பொருளாளர் அஜய் மேக்கான், பொதுச் செயலாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட், கேசி வேணுகோபால், பீஹார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
* அரசியல் அமைப்பு மீது பாஜ -ஆர்எஸ்எஸ் நடத்தும் இடைவிடாத தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நமது ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகள் சுக்கு நூறாக இடிக்கப்படுகின்றன.
* பாஜ ஆட்சியில் சமூக நீதி மிதிக்கப்படுகிறது. தனியார் மயமாக்கல் மூலம் இட ஒதுக்கீடு அழிக்கப்படுகிறது.
* பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என்ற பிம்பத்தை தரவுகள் மூலம் கட்டமைக்க முயன்றாலும், அரசால் பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது.
* இந்திய வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்ட சரிவு கவலை அளிக்கிறது.
* ஆப்பரேஷன் சிந்தூரை தடுத்து நிறுத்துவதற்காக இந்தியாவிடம் வர்த்தகத்தை பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். ஆனால், அரசு அதனை மறுக்கவில்லை.
* பிரதமர் மோடியால் இந்தியா ராஜதந்திர ரீதியாக தனிமைபடுத்தப்பட்டுள்ளது. தேசிய நலன்களைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது.
* ஓட்டுத் திருட்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் ஆகியன நமது ஜனநாயகத்தின் அடிப்படை மீதான நமது மக்களின் நம்பிக்கையை அசைத்து பார்த்துவிட்டது.
* வாக்காளர் பட்டியலைத் திருடி அதிகாரத்தில் ஒட்டிக் கொள்வதற்காக பாஜ., பயன்படுத்தும் மற்றொரு மோசமான தந்திரம் பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம்.
* வாக்காளர் பட்டியலில் திருத்தத்தில் உள்ள சதி, ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். விளிம்புநிலை சமூகங்களின் ஓட்டுரிமையை பறிக்க வகுக்கப்பட்ட செயல்முறை ஆகும்.
* காசாவில் நடக்கும் இனப்படுகொலை கவலை அளிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.