UPDATED : செப் 24, 2025 04:29 PM
ADDED : செப் 24, 2025 03:49 PM

புதுடில்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அக்.,2ம் தேதி தசராவும், அக்., 20ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அதில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்மூலம், ரூ.1,865 கோடி செலவினம் ஏற்படும். தண்டவாளம் பராமரிப்பாளர், லோகோ பைலட்கள், ரயில்வே மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், சூப்பர்வைசர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட மொத்தம் 11 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
அதேபோல, பல்வேறு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
* கப்பல் கட்டுமானத்துறையை மேம்படுத்த ரூ.69,725 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
* பீஹாரில் பக்தியார்பூர் - ராஜ்கிர் - தலையா ரயில் பாதையை இரட்டிப்பாக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
* பீஹாரில் உள்ள சாகேப்கஞ்-அரேராஜ்-பேட்டியா இடையே தேசிய நெடுஞ்சாலையை 78.942 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச் சாலைக் கட்டுமானப் பணிக்கு 3,822.31 கோடி ஒதுக்கீடு
* சிஎஸ்ஐஆர் திட்டத்தின் கீழ் திறன் வளர்ப்பு மற்றும் மனிதவள மேம்பாடு திட்டத்திற்கு 2021-22 முதல் 2025-26 வரை ரூ.2,277 கோடி ஒதுக்கீடு
* அரசு மருத்துவக் கல்லூரியில் 5,023 எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்கவும், எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பில் 5,000 இடங்களையும் அதிகரிக்க ஒப்புதல்.