இந்திய சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்: எக்ஸ் சமூகவலைதளத்தின் மனுவை நிராகரித்தது கர்நாடக ஐகோர்ட்
இந்திய சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்: எக்ஸ் சமூகவலைதளத்தின் மனுவை நிராகரித்தது கர்நாடக ஐகோர்ட்
ADDED : செப் 24, 2025 05:19 PM

பெங்களூரு: நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும், சுதந்திரமான பேச்சுரிமைக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்திய கர்நாடகா ஐகோர்ட், எக்ஸ் சமூக வலைதளத்தின் மனுவை நிராகரித்தது.
எக்ஸ் நிறுவனம், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(பி) மற்றும் சயோஹ்போர்ட்டல் மூலம் வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் உள்ளடக்க நீக்குதல் ஆணைகளை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கில், மத்திய அரசு அதிகாரிகள் தங்களின் விருப்பப்படி செயல்பட்டு, உள்ளடக்கத்தை நீக்குவதற்கான ஆணைகளை வெளியிடுவதாக எக்ஸ் சமூகவலைதளம் குற்றம் சாட்டியுள்ளது. இதை எதிர்த்து, எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்கள், பேச்சு சுதந்திரத்தை கோர முடியாது என்று கூறி, மத்திய அரசும் ஒரு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி என். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:
எக்ஸ் நிறுவனம் நாட்டின் சட்டங்களுக்கு இணங்க வேண்டும், பிரிவு 19ன் கீழ் சுதந்திரமான பேச்சுரிமைக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அல்ல, இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவது காலத்தின் தேவை. மேற்பார்வை இல்லாமல் மைக்ரோபிளாகிங் தளங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப்படாது. சமூக ஊடக நிறுவனங்கள் இந்தியாவில் கட்டுப்பாடில்லாமல் செயல்பட அனுமதிக்க முடியாது. கட்டுப்பாடற்ற பேச்சு சட்டவிரோதத்திற்கு வழிவகுக்கும். சட்டங்களை புறக்கணித்து இந்தியாவை ஒரு விளையாட்டு மைதானமாக கருத முடியாது.
இவ்வாறு கூறிய நீதிமன்றம், எக்ஸ் தளத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.