மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி; ஜெய்சங்கர் நம்பிக்கை
மக்களின் வாழ்க்கை, வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி; ஜெய்சங்கர் நம்பிக்கை
ADDED : செப் 04, 2025 07:41 AM

புதுடில்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கை மக்களின் வாழ்க்கை மற்றும் வர்த்தகத்தை எளிதாக்கும் முயற்சி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் நேற்று 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைத்து, செப்., 22ம் முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சாமானிய மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலைக்கான வரி விகிதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உப்பு முதல் கார் வரை பெரும்பாலான பொருட்களின் விலை குறையவுள்ளது.
அதேபோல, விவசாயிகளும், விவசாயத் துறையும் பயன்பெறுவர். நாட்டின் பொருளாதாரத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக, காப்பீடு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டியை ஏற்கும் ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த முடிவு, இந்திய மக்களின் வாழ்க்கை மற்றும் வர்த்தகத்தை செய்வதை எளிதாக்குவதற்கான அரசின் முயற்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த வரலாற்று சாதனைக்கு பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை வாழ்த்துகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.