கடும் குற்றச்செயல்களில் தண்டனை பெற்ற வெளிநாட்டவர் இந்தியாவுக்குள் நுழைய தடை: அமலுக்கு வந்தது புதிய சட்டம்
கடும் குற்றச்செயல்களில் தண்டனை பெற்ற வெளிநாட்டவர் இந்தியாவுக்குள் நுழைய தடை: அமலுக்கு வந்தது புதிய சட்டம்
ADDED : செப் 04, 2025 07:14 AM

புதுடில்லி: புதிதாக அமலுக்கு வந்துள்ள குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ல், தேசவிரோத செயல்கள், உளவு பார்த்தல், பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்றவர்களை, இந்தியாவுக்குள் நுழையவோ அல்லது தங்கி இருக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டின் குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டங்கள் பெரும்பாலும் பிரிட்டிஷ் காலத்தில் இயற்றப்பட்டவையாக இருந்தன. மேலும் இது தொடர்பாக நான்கு வெவ்வேறு சட்டங்கள் அமலில் இருந்தன. அவற்றை, 'குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025' என்ற பெயரில் மத்திய அரசு ஒருங்கிணைத்தது.
இந்த சட்ட மசோதா, கடந்த பிப்ரவரியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பார்லியில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இது, நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து குடியேற்றம் தொடர்பான பழைய நான்கு சட்டங்கள் காலாவதியாகின.
குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ல் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தேசவிரோத செயல்கள், உளவு பார்த்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, குழந்தை கடத்தல், பயங்கரவாத செயல்கள் ஆகிய குற்றங்களில் தண்டிக்கப்பட்ட வெளிநாட்டினர், இந்தியாவில் நுழையவோ அல்லது தங்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்
* இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்த வெளிநாட்டினரை நாடு கடத்தும் வரை, அவர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பிரத்யேக தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும்
* விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு வெளிநாட்டினரின் கைவிரல் ரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை பெற வேண்டும்
* சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைய முயல்பவர்களை எல்லைப் பாதுகாப்பு படைகள் அல்லது கடலோர காவல் படை கைது செய்தால், அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களையும் சேகரித்து, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அதன்பின் திருப்பி அனுப்ப வேண்டும்
* இந்தியாவில் திரைப்படம், ஆவணப்படம், இணைய தொடர்கள் அல்லது வணிக டிவி தொடர்களை தயாரிக்க வரும் வெளிநாட்டினர், மத்திய அரசின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும்
* நீதிமன்ற விசாரணையில் உள்ள நபர்கள், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நோய் தொற்று பாதித்தவர்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்படும்.
இத்தகைய அம்சங்கள் குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.