ஜெர்மனியுடன் வலுவாகும் நட்பு; ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு நீங்குகிறது
ஜெர்மனியுடன் வலுவாகும் நட்பு; ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு நீங்குகிறது
ADDED : செப் 04, 2025 07:12 AM

புதுடில்லி: ''இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும்,'' என நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டில்லி வந்துள்ள ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வேட்புல், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து நேற்று பேச்சு நடத்தினார். அதன் பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியனுடன், நம் நாடு நடத்தி வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சு, விரைவில் ஆக்கப்பூர்வமான முடிவை எட்டவுள்ளது. இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே ஒப்பந்தம் இறுதியாவதற்கு ஜெர்மனி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வேட்புல் உறுதியளித்துள்ளார்.
தற்போது ஜெர்மனியுடன் பொருளாதாரம், பருவநிலை மாறுபாடு, ராணுவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தியாவுடனான வர்த்தகத்தை இருமடங்காக பெருக்க ஜெர்மனி ஆர்வம் கொண்டுள்ளது. இதற்காக ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் ஜெர்மனி முன்வந்துள்ளது.
செமிகண்டக்டர் துறையிலும் இந்தியாவுடன் வலுவான கூட்டுறவை ஏற்படுத்த ஜெர்மனி விரும்புகிறது. இதை இந்தியா வெகுவாக வரவேற்கிறது.
பசுமை ஹைட்ரஜன் துறையிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற முடிவெடுத்துள்ளன. ஜெர்மனி உடனான இந்தியாவின் நட்புறவு மிகவும் முக்கியவத்துவம் வாய்ந்தது. அந்த நட்புறவு தற்போது வெகுவாக வளர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.