மாணவியருக்கு பாலியல் தொல்லை சாமியார் முன் ஜாமின் மனு தள்ளுபடி
மாணவியருக்கு பாலியல் தொல்லை சாமியார் முன் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : செப் 26, 2025 10:43 PM

புதுடில்லி:போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி மற்றும் மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆகிய வழக்குகளில் தேடப்படும், சைதன்யானந்த சரஸ்வதி தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
புதுடில்லி வசந்த் கஞ்ச்சில், 'ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மென்ட்' என்ற உயர்கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைமையில் இயங்கும் இந்த நிறுவனத்தில், டில்லி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர்.
டில்லி கிளையின் மேலாளராக இருந்த பார்த்தசாரதி என்ற சைதன்யானந்த சரஸ்வதி சாமியார், 17 மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.
மேலும், போலி ஆவணங்கள் வாயிலாக நிறுவனத்தின் நிதியில் மோசடி, போலி முகவரியில் விலை உயர்ந்த கார்கள் வாங்கியது உட்பட பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, பார்த்தசாரதி தலைமறைவானார். கல்வி நிறுவன வளாகத்தில் போலீஸ் நடத்திய சோதனையில், பார்த்தசாரதி மீதான புகார் உறுதியானது.
இதையடுத்து, அவர் மீது பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில், சாமியாருக்கு உடந்தையாக இருந்த கல்லுாரி துணை முதல்வர் ஸ்வேதா உட்பட மேலும் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவான பார்த்தசாரதி என்ற சைதன்யானந்தாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், சைதன்யானந்தா சார்பில், முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹர்தீப் கவுர் பிறப்பித்த உத்தரவு:
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மோசடி, ஏமாற்றுதல், சதி மற்றும் நிதி முறைகேடு ஆகியவை குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் அவர் கொடுத்துள்ள முகவரியிலும் இல்லை.
அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் விரும்பவில்லை. அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.