ஆகம விதியை பின்பற்றாத கோவில்கள் எவை? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
ஆகம விதியை பின்பற்றாத கோவில்கள் எவை? அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
ADDED : செப் 26, 2025 11:25 PM
தமிழகத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோவில்கள் எவை; உட்படாத கோவில்கள் எவை என்பது தொடர்பாக, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், ஆகம விதிகளை பின்பற்றும் கோவில்களில், ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்யவோ தடை விதிக்கக் கோரி, அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
கருத்து முரண் மேலும், முறையாக அர்ச்சகருக்கு படித்த நபர்களை தகுதியின் அடிப்படையில் அர்ச்சகராக நியமிக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் அனைத்தும், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில், உறுப்பினர் நியமனத்தில் தமிழக அரசுக்கும், அர்ச்சகர்களுக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டது. 'சர்ச்சைக்குரிய நபர்களை அந்த கமிட்டியில் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டாம்' என, தமிழக அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதி பதிகள் பிறப்பித்த உத்தரவு:
மூன்று மாதங்கள் ஆகம கோவில்களை கண்டறியும் கமிட்டியில், மயிலம் பொம்மபுர ஆதீனம் பாலய சுவாமிகளை உறுப்பினராக நியமிக்க உத்தரவிடுகிறோம்.
அந்த கமிட்டியின் மூலம், தமிழகத்தில் ஆகம விதிகளை பின்பற்றி தினசரி பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை, பின்பற்றாமல் பூஜைகள் நடக்கும் கோவில்கள் எவை என்பதை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும்.
அந்த அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2026 ஜன வரிக்கு ஒத்தி வைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -