PUBLISHED ON : மே 31, 2026 12:00 AM

“உ ரிமம் இல்லாத நிறுவனத்துக்கு பணியை குடுத்திருக்காங்க பா...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் அன்வர்பாய்.
“என்ன பணியை சொல்றீங்க...” எனக் கேட்டார் அந்தோணிசாமி.
“விஜய் முதல்வராக பதவியேற்றதும், 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' துவக்குறதுக்கான 'பைல்'ல கையெழுத்து போட்டாரே... இந்தப் படையின் துவக்க விழாவை, கடந்த 27 மற்றும் 29ம் தேதிகளில் நடத்த திட்டமிட்டு, கடைசி நேரத்தில் ஒத்தி வச்சுட்டாங்க பா...
“இந்த விழாவை நடத்தும் பொறுப்பை, ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைச்சிருக்காங்க... அந்த நிறுவனம், இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நடத்துறதுக்கான பொதுப்பணித் துறையின் உரிமம் வாங்கலையாம் பா...
“அந்த நிறுவனத்திடம் அரசு விழாக்களை நடத்துறதுக்கான எந்த கட்டமைப்பும், பொருட்களும் இல்லை... 'அனுபவமும் உரிமமும் இல்லாத நிறுவனத்துக்கு பணிகளை வழங்குறதா'ன்னு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் புலம்புறாங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“த.வெ.க.,வுக்கு ஓட்டம் எடுக்கப் போறாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“சட்டசபை தேர்தல்ல, ம.தி.மு.க., நிர்வாகிகள் திண்டுக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமாருக்கு தேர்தல் பணிகளை செய்யாம, அங்க போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசனுக்கு ஆதரவா செயல்பட்டிருக்காவ...
“இந்த உள்ளடி வேலையை, ம.தி.மு.க.,வின் மாநகர நிர்வாகியும், மாவட்ட நிர்வாகியும் சேர்ந்து தான் செஞ்சிருக்காவ... இதுக்காக, இவங்களுக்கு பெரும் தொகையும் கைமாறியிருக்கு வே...
“இவங்களை மீறி செந்தில்குமார் ஜெயிச்சிட்டாலும், விஷயத்தை ம.தி.மு.க., தலைமைக்கு கொண்டு போயிருக்காரு... உடனே, மாநகர நிர்வாகியை மட்டும் கட்சியில் இருந்து நீக்கிய வைகோ, மாவட்ட நிர்வாகியை கண்டுக்கல... நீக்கப்பட்ட மாநகர நிர்வாகி, த.வெ.க.,வுக்கு போக தயாராகிட்டாரு வே...” என்றார் அண்ணாச்சி.
“தமிழக காங்கிரஸ் ஓ.பி.சி., பிரிவு மாநில நிர்வாகி மேல, மோசடி புகார் குவியறதா முந்தாநாள் பேசுனோமோல்லியோ.... அதுக்கு அவர், 'நான் அப்படியேதும் செய்யலே'ங்கறார் ஓய்....” என்ற குப்பண்ணாவே, “வசூல் ரேட்டை ஏத்திட்டா...” என்றார்.
“எந்த துறையில வே...” என கேட்டார் அண்ணாச்சி.
“திருப்பூர் தெற்கு மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பலரும், துறையின் உயர் அதிகாரி கேக்கறார்னு, சாய ஆலைகளிடம் வசூல் பண்றா...
“கோர்ட் வழிகாட்டுதலின்படி, சாய ஆலைகள் சார்புல பொது சுத்திகரிப்பு நிலையங்களும், 60 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்கறது... இந்த நிலையங்களின் புதுப்பித்தல் பணிகளுக்காக, ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை அதிகாரிகளுக்கு கப்பம் கட்டணும் ஓய்...
“சின்ன ஆலைகளிடம் தலா 7 லட்சம் ரூபாயும், பெரிய ஆலைகளிடம் 9 லட்சம் ரூபாயும் வாங்கிண்டு இருந்தா... இதை இப்ப, 11 லட்சம் மற்றும் 13 லட்சம் ரூபாயா உசத்திட்டா... மிகப்பெரிய பொது சுத்திகரிப்பு நிலையங்கள், 25 லட்சம் ரூபாய் தரணும்னு கறாரா கேட்டு வசூல் பண்றா ஓய்...
“துறையின் உயர் அதிகாரியா இருக்கறவர், ஏற்கனவே திருப்பூர்ல இருந்தவர் என்பதால, 'அவர் தயவு இல்லாம ஆலைகளை நடத்திட முடியுமா'ன்னு மிரட்டியே வசூல் பண்றா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
“சரவணகுமார், இந்த பேப்பரை அங்க வையுங்க...” என்றபடியே அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
