PUBLISHED ON : ஜூன் 01, 2026 12:22 AM

பெஞ்சில் அமர்ந்த கையுடன், “ஊழியர்களை பழிவாங்குறதா புலம்புதாவ வே...” என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துல ரெண்டு அதிகாரிகள் இருக்காவ... இவங்க, சங்கத்துக்கு தனியார் நிறுவனம் மூலமா ஒப்பந்த ஊழியர்களா வந்தவங்களிடம், 'உங்களை நிரந்தரமாக்குறோம்'னு ஆசை காட்டி வசூல் வேட்டை நடத்துதாவ வே...
“அதே நேரம், தனியார் நிறுவனத்துக்கு சாதகமா இருந்து, அவங்க செய்ற முறைகேடுகளுக்கும் உடந்தையா இருக்காவ... தனியார் நிறுவனம் மீது அதன் ஊழியர்கள் ஏதாவது புகார் சொன்னா, அடுத்த நிமிஷமே அவங்களை வேலையில இருந்து நீக்கிடுதாவ வே...
“இதனால, கடும் மன உளைச்சல்ல இருக்கும் ஊழியர்கள், 'ஊழல் அதிகாரிகள் மீது தமிழக வெற்றிக் கழக அரசு நடவடிக்கை எடுக்கணும்'னு புலம்புதாவ வே...” என்றார் அண்ணாச்சி.
“மதியழகன், கோவிந்தன் தள்ளி உட்காருங்க...” என்ற அன்வர்பாயே, “தொழிற்சங்கத்தினர் அடாவடி தாங்க முடியல பா...” என்றார்.
“எந்த கட்சி தொழிற்சங்கத்தை சொல்றீங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“அரசு போக்குவரத்து கழக டிப்போக்கள்ல எல்லா கட்சிகளுக்கும் தொழிற்சங்கம் இருக்குது... மதுரை புறநகர் வடக்கு மற்றும் கே.புதுார் டிப்போக்கள்ல இருந்த தி.மு.க., மற்றும் ஆம் ஆத்மி கட்சி தொழிற்சங்கத்தினர், இப்ப, த.வெ.க., தொழிற்சங்க நிர்வாகிகளா உருமாறிட்டாங்க பா...
“இவங்க, 'ஷெட் டூட்டி'ன்னு, 'ரிஜிஸ்டர்'ல எழுதிட்டு வேலைக்கே வர்றதில்ல... அதோட தங்களுக்கு வேண்டிய டிரைவர், கண்டக்டர்களுக்கு நிறைய வசூலாகும் வழித்தடங்கள்ல, 'டூட்டி' ஒதுக்கி, அவங்களிடம் கமிஷன் வாங்குறாங்க...
“வடக்கு டிப்போவுல தி.மு.க., சங்க நிர்வாகியும், புதுார் டிப்போவுல ஆம் ஆத்மி சங்க நிர்வாகியும், த.வெ.க., வுக்கு மாறி அடாவடி பண்ணிட்டு இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“செந்தில்குமாரும் செல்வகணபதியும் வரா... பில்டர் காபி குடும் நாயரே...” என்ற குப்பண்ணாவே, “பூவுக்குள் பூகம்பம் வெடிக்கும்னு சொல்றா ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“நீலகிரி மாவட்டம், ஊட்டி தாவரவியல் பூங்காவில், சமீபத்துல 128-வது மலர் கண்காட்சியும், ரோஸ் கார்டனில் 21வது ரோஜா கண்காட்சியும் நடந்துது... 'ரோஜா கண்காட்சியில் 2 லட்சம் ரோஜாக்களையும், தாவரவியல் பூங்காவில் 7 லட்சம் மலர்களையும் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்திருந்தோம்'னு தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பெருமை அடிச்சுண்டா ஓய்...
“இதுக்கான மலர்களை பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் மூலமா வாங்கியிருக்கா... மலர் கண்காட்சி நடந்தப்ப மழை வந்துட்டதால, சில வகை பூக்களை லாரியில் இருந்து இறக்காம அப்படியே திருப்பி அனுப்பிட்டா ஓய்...
“ஆனாலும், வாங்கிய பூக்களுக்கு கூடுதலா பில் போட்டு, சிலர் பெரும் தொகையை எடுத்துண்டதா முதல்வர் விஜய்க்கு புகார்கள் போயிருக்கு... 'இது பத்தி நேர்மையா விசாரணை நடத்தினா ரெண்டு பெண்கள் உட்பட மூணு அதிகாரிகள் சிக்குவா'ன்னு தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் முணுமுணுத்துண்டு இருக்கா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, “நவநீதா, பேபிதா, பைசல் எல்லாம் வந்துட்டாவளா... இந்தா கிளம்பிட்டோமுல்லா...” என்றபடியே நடக்க, மற்றவர்களும் எழுந்தனர்.
