/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' பார்ச்சூனர் ' கார் கேட்டதால் கட்சி தாவிய கவுன்சிலர்!
/
' பார்ச்சூனர் ' கார் கேட்டதால் கட்சி தாவிய கவுன்சிலர்!
' பார்ச்சூனர் ' கார் கேட்டதால் கட்சி தாவிய கவுன்சிலர்!
' பார்ச்சூனர் ' கார் கேட்டதால் கட்சி தாவிய கவுன்சிலர்!
PUBLISHED ON : செப் 27, 2025 12:00 AM

ப டித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, ''அலுவலகத்துக்கே வர மாட்டேங்காரு வே...'' என, பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குநர் அலுவலகம் இருக்கு... இங்க அதிகாரியா இருக்கிறவருக்கு சொந்த ஊர், திருச்சி... அங்கயே சொந்தமா கிளினிக்கும் நடத்துதாரு வே...
''அந்த கிளினிக்குலயே இருக்கும் அவர், திண்டுக்கல் அலுவலகத்துக்கு அடிக்கடி வர மாட்டேங்காரு... அதிகாரிகள், முக்கிய அரசியல் புள்ளிகள் ஆய்வுக்கு வந்தா மட்டுமே திண்டுக்கல் பக்கம் தலைகாட்டுதாரு வே...
''மற்ற நேரங்கள்ல, திருச்சி கிளினிக்குல தான் இருக்காரு... தன் அலுவலக சம்பந்தப்பட்ட பைல்கள்ல கையெழுத்து போடணும்னாலும், ஊழியர்களை திருச்சிக்கு வாங்கன்னு அலைக்கழிக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''முத்துராஜ், தள்ளி உட்காரும்...'' என்றபடியே வந்த குப்பண்ணா, ''இவாளுக்கு கூட்டணி ஆட்சி பத்தி பேசவே தகுதியில்லன்னு சொல்றா ஓய்...'' என்றார்.
''தி.மு.க., - காங்., தகவலா பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... 'வர்ற சட்டசபை தேர்தல்ல தி.மு.க.,விடம் கூடுதல் சீட்கள், ஆட்சியில் பங்கு கேட்கணும்'னு காங்., தரவு ஆராய்ச்சி துறையின் தேசிய தலைவர் பிரவீண் சக்கர வர்த்தி, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட சிலர் பேசிட்டு இருக்காளோல்லியோ...
''இது சம்பந்தமா, அறிவாலயத்துல தி.மு.க., புள்ளிகள் சிலர் சமீபத்துல ஆலோசனை நடத்தியிருக்கா ஓய்... அப்ப, இதுவரை எந்த தேர்தல்லயும் போட்டியிடாத பிரவீண் சக்கர வர்த்தியும், கோவா முதல்வர் வேட்பாளரா அறிவிக்கப்பட்டும், தேர்தல்ல தோற்று போன கிரிஷ் சோடங்கரும் கூட்டணி ஆட்சி பத்தி பேசவே தகுதியில்லாதவா...
''அதுவும் இல்லாம நம்ம முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் நல்ல நட்புல இருக்கா... அதனால, சீட் பங்கீடு பத்தி எல்லாம் அவாளே பேசிக்குவா... நாம யாரும் அவசரப்பட்டு, அவாளுக்கு பதிலடி தர வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பதவி வழங்க, 'பார்ச்சூனர்' கார் கேட்டதால, கட்சி மாறிட்டாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த கட்சியிலவே இந்த கூத்து...'' என கேட்டார், அண்ணாச்சி.
''சென்னை மாநகராட்சி சுயேச்சை கவுன்சிலர் ஒருத்தர், அண்ணாமலை மாநில தலைவரா இருந்தப்ப, தமிழக பா.ஜ., வுல சேர்ந்தாரு... அந்த கவுன்சிலர் ஏற்கனவே அ.தி.மு.க.,வுல இருந்து வெளியேறி, சுயேச்சையா நின்னு கவுன்சிலராகி யிருந்தாரு பா...
''தமிழக பா.ஜ.,வுல தலைமை மாறியதும், அந்த கவுன்சிலர் புதிய தலைவரை பார்த்து, தனக்கு கட்சியின் ஓ.பி.சி., அணியில் பதவி தரும்படி கேட்டி ருக்காரு... அவரும், ஓ.பி.சி., அணி நிர்வாகி ஒருத்தரை போய் பார்க்கும்படி சொல்லியிருக்காரு பா...
''இதன்படி, அந்த நிர்வாகியை கவுன்சிலர் பார்த்திருக்காரு... அவரோ, 'பதவிக்கு பரிசா, 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'பார்ச்சூனர்' கார் வாங்கி தரணும்'னு நிபந்தனை விதிச்சிருக்காரு... அதிர்ச்சியான சுயேச்சை கவுன்சிலர், தான் முன்னாடி இருந்த அ.தி.மு.க.,வுக்கே போயிட்டாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.