/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கோவில் நகர் போலீசில் குற்றப்பிரிவுக்கு மூடுவிழா!
/
கோவில் நகர் போலீசில் குற்றப்பிரிவுக்கு மூடுவிழா!
PUBLISHED ON : செப் 28, 2025 12:00 AM

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''மொபைல் போனை எடுக்கவே மாட்டேங்கிறாங்க பா...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழகத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களை இணை பதிவாளர்கள், கூடுதல் பதிவாளர்கள் நிர்வாகம் செய்றாங்க... இவங்களுக்கு துறையின் சார்பில், சி.யு.ஜி., எனப்படும் குழு மொபைல் போன் எண்கள் குடுத்திருக்காங்க பா...
''இந்த நம்பர்கள்ல, அவங்களுக்குள்ள இலவசமா பேசிக்கலாம்... ஆனா, இந்த நம்பர்களுக்கு பொதுமக்கள் கூப்பிட்டா கூடுதல் பதிவாளர்கள், இணை பதிவாளர்கள் பலரும் எடுக்கவே மாட்டேங்கிறாங்க பா...
''இன்னும் சில அதிகாரிகள் இந்த போன்களை, 'சுவிட்ச் ஆப்' பண்ணியே வச்சிருக்காங்க... தங்களுக்கு தனியா ஒரு மொபைல் போன் வச்சு பயன்படுத்திட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சலுகையை உரிமையா மாத்திட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர்ல இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆடைகளை, துாத்துக்குடி துறைமுகத்துக்கு கன்டெய்னர் லாரிகள்ல ஏத்திண்டு போறா... அங்க, சரக்கு முனையங்கள்ல, ஆடைகள் அடங்கிய பெட்டிகளை இறக்கி வைக்கற சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு டீ, காபி செலவுக்கு, 'பேட்டா' மாதிரி லாரி உரிமையாளர்கள் குடுத்துட்டு இருந்தா ஓய்...
''நாளடைவில் ஒரு கன்டெய்னருக்கு, 500 ரூபாய்னு தொழிலாளர்கள் வாங்க ஆரம்பிச்சுட்டா... இப்ப, 'பெரிய கன்டெய்னர்களுக்கு, 1,200 ரூபாய் தரணும்'னு கட்டாயப் படுத்தறா ஓய்...
''அவாளுக்கு, சரக்கு முனையத்துல இருந்து தனியா சம்பளம் தந்துடறா... டீ, காபி செலவுக்குன்னு குடுத்ததை, இப்ப தொழிலாளர்கள் கறாரா கேக்கறா... அதுவும், 'வர்ற 1ம் தேதி முதல் கூடுதல் தொகையை தரணும்'னு மிரட்டலா கேக்கறதால, லாரி உரிமையாளர்கள் நொந்து போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''குற்றப்பிரிவுக்கு மூடு விழா நடத்திட்டாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டத்தில், பிரபல முருகன் கோவில் ஊர் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல, 98 கிராமங்கள் இருக்கு... இந்த ஸ்டேஷன்ல, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு தனித்தனி இன்ஸ்பெக்டர்கள் இருந்தாவ வே...
''குற்றப்பிரிவுல இருந்த இன்ஸ்பெக்டர், சென்னைக்கு, 'டெபுடேஷன்'ல போயிட்டாரு... கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா அங்கனயே தான் இருக்காரு வே...
''இவரை தொடர்ந்து, குற்றப்பிரிவுல இருந்த எஸ்.ஐ., ஏட்டு மற்றும் போலீசார்னு, 14 பேர், வேற இடங்களுக்கு மாறுதல் வாங்கிட்டு போயிட்டாவ... இன்னும் சிலர், அதே ஸ்டேஷன்ல சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு மாறிட்டாவ வே...
''இப்ப, குற்றப்பிரிவு கூண்டோடு காலியாயிட்டு... இதனால, கடந்த ஒரு வருஷமா திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகமா நடக்கு வே...
''சட்டம் - ஒழுங்கு போலீசாரோ, 'எங்க வேலையையே பார்க்க முடியல... இதுல, குற்றங்களை எங்க இருந்து தடுக்கிறது'ன்னு புலம்புதாவ வே...
''இந்த போலீஸ் லிமிட்ல, தினமும் குறைஞ்சது அஞ்சு பைக் திருட்டுகள், மொபைல் போன் வழிப்பறிகள் நடக்கு... உயர் அதிகாரிகளும் எதையும் கண்டுக்காம கம்முன்னு இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.