/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ராணுவ வீரர்களுக்கு ராக்கி கட்டினால் சந்தோஷம்!
/
ராணுவ வீரர்களுக்கு ராக்கி கட்டினால் சந்தோஷம்!
PUBLISHED ON : செப் 21, 2025 12:00 AM

ரோட்டரி சங்கம் சார்பாக ராணுவ வீரர்களுக்கு ராக்கி கட்டும் சென்னையைச் சேர்ந்த ரேவதி கணேசன்: சகோதரத்துவத்தை கொண்டாடும் விசேஷங்களில், நம் நாட்டில், 'ரக் ஷா பந்தன்' மிகப் பிரபலமானது. சகோதரர்களுக்கு கைகளில் ராக்கி எனும் கயிறு கட்டிவிட்டு, இனிப்பும் பரிசுகளும் பகிர்ந்து கொள்ளும் இந்த நிகழ்வு, சமீபகாலமாக தமிழகத்திலும் தலைதுாக்கியுள்ளது.
இதற்கெல்லாம் முன்பே, அதாவது 25 ஆண்டுகளுக்கும் மேலாக ரோட்டரி சங்கம் சார்பாக ராணுவ வீரர்களுக்கு ராக்கி காட்டி வருகிறோம்.
கடந்த 1998-ம் ஆண்டு நாங்கள் கோவையில் குடியிருந்தபோது பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்தச் சம்பவத்தின்போது, பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த ஜவான்கள் தங்கியிருந்த கல்யாண மண்டபத்தை கடந்து செல்வோம்.
அப்போதெல்லாம், உறவுகளைப் பிரிந்து நம் நாட்டுக்காக பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்று நினைத்திருக்கிறேன். அந்தச் சமயத்தில் ரக் ஷா பந்தன் தினம் வந்தது. அங்கிருந்த ஜவான்கள் அனைவருக்கும் ராக்கி கட்டினோம்.
ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வோர் உணர்வு... அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ரக் ஷா பந்தன் அன்று, நுாற்றுக்கணக்கான ராக்கி வாங்கி, கோவையில் இருந்த ராணுவ பட்டாலியனுக்கு கொடுப்போம்.
அங்கே எங்களை நேரடியாக அனுமதிக்காவிட்டாலும், நாங்கள் அனுப்பும் ராக்கி கயிறுகள் கண்டிப்பாக ராணுவ வீரர்களின் கைகளில் போய் சேர்ந்துவிடும்.
கடந்த 2014-ம் ஆண்டு, நேரடியாக ராணுவ தலைமை இடத்திற்கு ராக்கி கயிறுகளை அனுப்பி வைக்க எங்களுக்கு அனுமதி கொடுத்தனர். அதிலிருந்து ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 5,000 ராக்கிகள், அட்சதை போன்றவை உள்ள பாக்கெட்டுகளை, இந்திய ராணுவ தலைமையிடத்திற்கு அனுப்பி வைக்கிறோம்.
நாங்கள் அனுப்பும் ராக்கி கயிறுகள், இந்தியாவின் எல்லை பகுதியில் உள்ள சியாச்சின், சீனாவின் எல்லை, கார்கில், லே, லடாக் என, பல இடங்களில் பணியாற்றும் படை வீரர்களுக்கு போகின்றன.
என் கணவருடன் இணைந்து ரோட்டரி நண்பர்கள் சிலர், இசைக்குழு ஒன்றை நடத்தி வந்தனர். அவ்வப்போது கோவை மத்திய சிறைச்சாலை, ராணுவ முகாம்கள், விமானப்படை தளங்கள், முதியோர் இல்லங்கள் என்று பல இடங்களிலும் இலவசமாக இசைக் கச்சேரியை நடத்தி வந்தனர்.
எங்களுக்கு அறிமுகமான கர்னல் ஒருவர் வாயிலாக கடந்த ஆண்டு ரக் ஷா பந்தனுக்கு, வடக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய - -பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குப்வாராவுக்கு நேரில் வர அழைப்பு வந்தது. இசைக்குழுவுடன் அங்கு சென்றோம்.
கிட்டத்தட்ட 12,000 அடி உயரத்தில், கடும் குளிரை பொருட்படுத்தாமல் உழைக்கும் ராணுவ வீரர்களுக்காக இசைக் கச்சேரி நடத்திவிட்டு, மறுநாள் ராக்கி கட்டிவிட்டபோது, அவர்களிடம் எழுந்த உணர்ச்சிப் பெருக்கை, வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
உறவுகளைப் பிரிந்து, உயிரை பணயம் வைத்து உழைக்கும் இந்த வீரர்களுக்கு, ஏதோ எங்களால் தர முடிந்த சின்ன சந்தோஷமாக நினைத்து கால் நுாற்றாண்டாக இதை தொடர்ந்து வருகிறோம். இனியும் தொடர்வோம்!
-நல்ல படிப்பு மாதிரி வேறு எதுவும்கைகொடுக்காது!
மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடினமாக படித்து, சி.ஏ., படிப்பில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்துள்ள, சென்னை, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கவிதா உமாபதி: ரொம்ப எளிமையான குடும்பம் எங்களோடது. வரவுக்கும், செலவுக்கும் எப்பவும் இழுபறிதான். நான் நல்லா படிப்பேன். பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தேன். டாக்டர், இன்ஜினியர் ஆக ஆசைப்பட்டாலும், எதிர்காலத்தில் காலேஜ் கட்டணம் கட்ட முடியாமல் போகும் என்பதால், பிளஸ் 1ல் காமர்ஸ் எடுத்து படித்தேன்.
பிளஸ் 2வில், 90 சதவீதம் மார்க் எடுத்தேன். அரசு கல்லுாரியில் பி.காம்., சேர்ந்தேன். 1,500 ரூபாய் கட்டணம்.
நான் நல்ல மார்க் எடுத்திருந்ததால், எங்கப்பா ஆபீஸ்ல இருந்து எனக்கு மூணு வருடம், 'பீஸ்' கட்டிட்டாங்க. அப்பாவை கஷ்டப்படுத்தாம படிக்கிறோம்னு பெரிய நிம்மதி.சி.ஏ., பரீட்சை எழுத எந்த, 'கோச்சிங் கிளாஸ்'க்கும் போகல; சுயமா தான் படிச்சேன். புத்தகங்கள் வாங்க வசதியில்லை என்பதால், லைப்ரரிக்கு போய்தான் படிப்பேன். என்னை மாதிரியே சி.ஏ.,க்கு தயாராகிட்டு இருந்த என் தோழியர் கூட, அங்க வந்துதான் படிப்பாங்க.
எல்லாரும் காலை, 8:00 மணிக்கு லைப்ரரிக்கு போயிடுவோம். அங்கேயே உட்கார்ந்து படிச்சிட்டு, தேவையான புத்தகங்களை மட்டும் நகல் எடுத்துக்குவோம். சி.ஏ., படிப்பு கடுமையானது தான். இருந்தாலும், இதை தாண்டிட்டா, நம்ம வாழ்க்கை மாறிடும்னு, எனக்கு நானே சொல்லிப்பேன். கடுமையான உழைப்பை கொடுத்து படிச்சேன். முதல் முயற்சியிலேயே, எல்லா தேர்வுகள்லயும் பாஸ் ஆகிட்டேன்.
நான் நினைச்ச மாதிரியே, இப்ப என் வாழ்க்கை மாறியிருக்கு; வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கு. ஒரு ஆடிட்டரா, பரபரப்பான வாழ்க்கை, ரொம்ப சுவாரஸ்யமா போயிட்டிருக்கு. சின்ன கம்பெனிகள் வரை கையாள்கிறேன்.
வருமான வரி, ஜி.எஸ்.டி.,ன்னு ஆலோசனைகள் கொடுக்கிறேன்.
'ஆடிட்டிங்' வேலைகள், நிறுவனங்களுக்கான நிதி நிலை அறிக்கைகள் தயார் செய்றதுன்னு என் வேலை நல்லா போயிட்டிருக்கு.அனுபவங்கள்ல இருந்து நிறைய கத்துக்கிட்டு, என்னை இன்னும் சீர்படுத்திக்கிறேன். இளம் வயசுல ஆசைப்பட்டது எதுவுமே கிடைக்கலைன்னு சொல்றதைவிட, நான் எதுக்குமே ஆசைப்பட்டது இல்லைங்கிறது தான் உண்மை.
நான் படிச்ச படிப்பு தான், இப்ப என் குழந்தைங்க ஆசைப்படுற எல்லாத்தையும் தர்ற ஒரு தாயா மாத்தி இருக்கு. சின்ன வயசுல, கஷ்டத்தைப் பத்தியோ, மற்ற வம்பு தும்புகளைப் பத்தியோ யோசிச்சு நேரத்தை வீணடிக்காம படிச்சா, அது கைகொடுக்கிற மாதிரி, வேறு எதுவும் கைகொடுக்காது!