PUBLISHED ON : செப் 22, 2025 12:00 AM

-தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே உள்ள கரிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா. கூடை, தட்டு மூடி என, நாம் அன்றாடம் பயன்படுத்தும், கிட்டத்தட்ட, 120 பொருள்களை வாழை நாரில் தயாரித்து அசத்தி வருவது பற்றி கூறுகிறார்: பி.காம்., படித்து விட்டு ஒரு கடையில், 'சேல்ஸ்' வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். திருமணம் முடிந்தது...
குடும்பப் பொருளாதாரத்துக்குக் கைகொடுக்க நானும் ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று நினைத்தேன். அப்போது, வாழைநாரிலிருந்து மதிப்புக்கூட்டல் பொருட்கள் செய்யும் பயிற்சி பற்றி தெரிய வந்தது.
கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வரச் சொன்னார்கள். அங்கு, 10 நாட்கள் பயிற்சி கொடுத்தனர். வாழை மட்டையில் இருந்து நாரை பிரித்து, காய வைத்து, அதில் என்ன மாதிரியான பொருட்களை செய்யலாம் என்ற அடிப்படைகளை தெளிவாகக் கற்றுக்கொடுத்தனர்.
அதன் பின், வாழை நார் மதிப்புக்கூட்டல் பொருட்கள் தொழில் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை வந்தது. கணவரும் உற்சாகப்படுத்தினார். எங்களுக்குச் சொந்தமாக ஒரு வாழைத் தோட்டம் இருந்ததால், மூலப் பொருள் பிரச்னை இல்லை.
வாழைநாரை பிரித்துக் கொடுக்கும் மெஷின், நார்களை இணைத்துக் கட்டும் கைத்தறி ஆகியவற்றை வாங்கவும், தோட்டத்துக்கு அருகிலேயே தொழிற்கூடமாக ஒரு கட்டடம் கட்டவும் என, 3 லட்சம் ரூபாய் செலவானது.
தோட்டத்தில் வெட்டிய வாழை மரங்களின் பட்டைகளை மெஷினில் கொடுத்தால், நாராகப் பிரித்துக் கொடுத்து விடும். கைத்தறி வாயிலாக அந்த நார்களை இணைத்து கூடைகள், டீ கப்புகளை செய்ய துவங்கினேன்.
'ஆர்டர்'கள் பிடிப்பது தான் சிரமமாக இருந்தது. பள்ளிகள், கல்லுாரிகள் என 'ஸ்டால்' போட்டோம். 'என்னது, வாழைநாரில் பொருள்களா...' என்று பலரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்; சிலர் வாங்கவும் செய்தனர்.
என் கணவரின் தம்பி, தொழிலுக்கான, 'மார்க்கெட்டிங்' வேலைகளை துவக்கினார்; நிறைய ஆர்டர்கள் வரத் தொடங்கின. பல ஊர்களுக்கும் அனுப்பி வைக்க துவங்கினோம் .
எங்கள் வாடிக்கையாளர்கள் தான், 'இந்தப் பொருள் செய்ய முடியுமா; இது போல வாழைநார்ல கிடைக்குமா...' என்று எங்களுக்கு நிறைய, 'ஐடியா'க்களை அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
அவர்களுக்கு எங்கள் பொருள்களின் தரம் பிடித்துப் போனதால், 'ரெகுலர் கஸ்டமர்' களாகவும் ஆயினர்.
இப்போது நாங்கள், 'பர்ஸ், பென்சில் ஸ்டாண்டு' மற்றும் கால் மிதியடி என, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய, 120 பொருட்களை வாழைநாரில் செய்கிறோம். எங்கள் பொருட்களை இப்போது தமிழகம் தாண்டி, வெளி மாநிலங்களுக்கும் அனுப்புகிறோம். எங்களிடம், 15 பெண்கள் வேலை பார்க்கின்றனர்.
இந்த கிராமத்தில் இருந்தபடியே நான், மாதம் 5 லட்சம் ரூபாய் வருமானம் பார்க்கிறேன். கூடவே, சூழலுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு தொழிலைச் செய்யும் மன நிறைவும் கிடைக்கிறது!