/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
உணவுத்துறையில் ஏராளமான தொழில் வாய்ப்பு!
/
உணவுத்துறையில் ஏராளமான தொழில் வாய்ப்பு!
PUBLISHED ON : செப் 20, 2025 12:00 AM

'ஆர்.சாந்தி ராஜ சேகர் கேட்டரிங் சர்வீஸ்' உரிமையாளரான, சென்னையை சேர்ந்த சாந்தி அம்மா: என் சொந்த ஊர் திருநெல்வேலி. 19 வயசுல, திண்டுக்கல் மாப்பிள்ளைக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுத்தப்போ, எனக்கு சமைக்கவே தெரியாது.
என் கணவர் ராஜசேகர், அங்கு ஹோட்டல் நடத்திட்டு இருந்தார். நான் முதலில் வீட்டு சமையலையும், அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஹோட்டல் சமையலும் கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்தில் ஹோட்டல் நஷ்டமாகவே, நானும் கணவரும் குழந்தைகளோடு சென்னைக்கு வந்தோம்.
சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், எங்கப்பா நடத்திய கேன்டீன்ல வேலைக்கு சேர்ந்தேன். இங்கு சமையல் தொழிலையும் கத்துக்கிட்டேன்.
அப்பா கொடுத்து உதவிய முதலீட்டு பணம், 1,500 ரூபாயுடன் சென்னை, தரமணி வி.எச்.எஸ்., மருத்துவமனையில் கேன்டீன் ஆரம்பிச்சோம்.
உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்ததால, நோயாளிகள், நர்ஸ், மருத்துவர்கள்னு எல்லா தரப்பும் ஆதரவு கொடுத்தாங்க. கிட்டத்தட்ட, 19 வருடங்கள் அங்க தொழில் நல்லபடியா போச்சு. கூடவே, பெண்கள் அமைப்புகள், கல்லுாரி விடுதிகளுக்கு உணவு டெலிவரி பண்ணினோம்.
இந்த தொழில்ல, இத்தனை வருடங்களில் பல பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுத்துட்டு வர்றதை நினைக்கும் போது மன திருப்தி கிடைக்கும்.
அதேபோல, ஒவ்வொரு பவுர்ணமிக்கும் திருவண்ணாமலை அடிவாரத்தில், 2,000 பேருக்கு நாங்களே சமைச்சு அன்னதானம் பண்ணுவோம்.
எங்க கேட்டரிங் சர்வீஸ் மூலமா, சென்னை முழுக்க ஆர்டர்கள் எடுத்து உணவு வழங்குறோம்.
சென்னை, பெருங்குடியில், 'ஸ்ரீசம்பூர்ணா மினி ஹால்'னு ஹோட்டல் கட்டி வெற்றிகரமா நடத்திட்டு வர்றோம். மகன்களும், மருமகள்களும் முன்னின்று நடத்துறாங்க.
எனக்கு இப்ப, 63 வயசானாலும், ஆர்டர்னு வந்துட்டா, என் குழுவோடு சேர்ந்து, 300 - 400 பேருக்கு கூட சமைச்-சு இறக்கிடுவேன். இப்ப மாதம், 3 லட்சம் ரூபாய் வரு மானம் பார்க்கிறேன்.
இங்க, பெண்கள் பலருக்கும் நல்ல கைப்பக்குவம் இருக்கும். அதை தொழிலாக்க கத்துக்கிட்டா, கை நிறைய சம்பாதிச்சு கொடுக்கும்.
வீட்டிலேயே செய்ற உணவு பொருட்கள், வீட்டிலிருந்தே சமைச்சு கொடுக்கிற உணவுகள்ல இருந்து, உணவு பொருள் தயாரிப்பு கம்பெனி, கேட்டரிங், ஹோட்டல்னு உணவுத் துறையில ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருக்கு.
' வீட்டுக்குள்ளேயே இருந்து ஏதாச்சும் பண்ணனும்... ஆனா, என்ன பண்ணுறதுன்னு தெரியலையே'ன்னு யோசிச்சிட்டே இருக்காம, நாலு பக்கமும் கொஞ்சம் இறங்கி தேடிப் பாருங்க. உங்களுக்கான பாதை நிச்சயம் தென்படும்.