/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அரிய வகை பழ மரங்களை வளர்க்கிறேன்!
/
அரிய வகை பழ மரங்களை வளர்க்கிறேன்!
PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

பலவகையான மரங்களை வளர்த்து, பழங்கள் விற்பனை செய்து வரும், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்: பி.டெக்., டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்துவிட்டு, டெக்ஸ்டைல் சார்ந்த பிசினஸ் செய்து வருகிறேன். தொழில் நிமித்தமாக பல நாடுகளுக்கும் பயணம் செய்கிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே மரம், செடிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். எங்களுக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில் பலவிதமான பழ மரங்கள் அடங்கிய பண்ணையை உருவாக்கினேன்.
என்னுடைய பண்ணை, விஜயமங்கலத்தில் இருந்து, 5 கி.மீ.,யில் உள்ள, கோடாப்புலியூர் கிராமத்தில் அமைந்துஉள்ளது. இயற்கை விவசாயத்தில் பழங்கள் சாகுபடி செய்து வருகிறேன்.இங்கு, 60 இலந்தை மரங்கள் வாயிலாக ஆண்டுக்கு, 600 கிலோ பழங்கள் கிடைக்கின்றன. 1 கிலோ, 40 ரூபாய் என விற்பனை செய்கிறேன்.
இதன் வாயிலாக, 24,000 ரூபாய் கிடைத்தது. நாவலில் இந்த ஆண்டு ஒரு மரத்திற்கு 8 கிலோ வீதம், 480 கிலோ பழம் கிடைத்தது. அதை, கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனை செய்ததன் வாயிலாக, 96,000 ரூபாய் கிடைத்தது.
மேலும், 20 முள் சீத்தா மரங்கள் வாயிலாக, 300 கிலோ கிடைத்தது. 1 கிலோ, 80 ரூபாய் வீதம் 24,000 ரூபாய் கிடைத்தது. 20 பப்பாளி மரங்கள் வாயிலாக ஒரு மரத்திற்கு, 30 கிலோ வீதமாக, 1 கிலோவிற்கு, 30 ரூபாய் என 18,000 ரூபாய் கிடைத்தது. 40 தென்னை மரங்கள்
வாயிலாக சராசரி, 4,000 தேங்காய்கள் என ஒரு தேங்காய்க்கு 25 ரூபாய் வீதம் 1 லட்சம் ரூபாய் கிடைத்தது.
இலந்தை, தென்னை, முள் சீத்தா, பப்பாளி மற்றும் நாவல் வாயிலாக, ஆண்டுக்கு 2.62 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. விளைபொருட்களை பலரும் பண்ணைக்கு வந்தே வாங்குகின்றனர். குறிப்பாக, முள் சீத்தா பழங்கள் வாங்க பண்ணைக்கு அதிகளவில் வருகின்றனர்.
பண்ணையில் விற்றது போக மீதியை விஜயமங்கலத்தில் உள்ள என் கடையில் விற்பனை செய்கிறேன். இடுபொருள் செலவு, பராமரிப்பு என இப்போதைக்கு வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருக்கிறது. நாவல், எலுமிச்சையில் கூடுதல் மகசூல் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. மகசூல் அதிகரிக்க அதிகரிக்க, வருமானம் கூடும். விதவிதமான பயிர்களை வளர்த்து ஒரு பண்ணையை உருவாக்க நினைத்தேன்.
அந்த வகையில் வருமானத்தோடு அரிய வகை பயிர்களை வளர்க்கக்கூடிய பண்ணையாகவும், மரங்கள் வளர்ப்பு முன்மாதிரி பண்ணையாகவும் மாற்ற வேண்டும் என்பதே நோக்கம். அதற்கான முயற்சியில் இருக்கிறேன். தொடர்புக்கு 97906 11613