/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
ஐ.ஏ.எஸ்., ஆகி விளிம்புநிலை மக்களுக்கு உதவ வேண்டும்!
/
ஐ.ஏ.எஸ்., ஆகி விளிம்புநிலை மக்களுக்கு உதவ வேண்டும்!
ஐ.ஏ.எஸ்., ஆகி விளிம்புநிலை மக்களுக்கு உதவ வேண்டும்!
ஐ.ஏ.எஸ்., ஆகி விளிம்புநிலை மக்களுக்கு உதவ வேண்டும்!
PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

கிட்டத்தட்ட, 90 சதவீதம் பார்வை குறைபாடு இருப்பினும், 2024ம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் --- 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று, வணிகவரித் துறை துணை அலுவலராக தேர்வாகியுள்ள, திருவாரூர் மாவட்டம், வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த, 25 வயது வர்ஷா.
நான் ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோதே, என் பெற்றோர் உடல்நலக் குறைவால் அடுத்தடுத்து இறந்து விட்டனர். அதன் பிறகு இன்று வரை என் பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்து வருகிறேன்.
ஒருமுறை, எங்கள் பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வுக்கு வந்திருந்தார். நான் புத்தகத்தை உற்றுப் படிப்பதை பார்த்த அவர் தான், எனக்கு பார்வை பிரச்னை இருக்கக்கூடும் என்று சொன்னார். 10ம் வகுப்பு வரை கண்ணாடி அணிந்து படித்து சமாளித்தேன்.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில், உருப்பெருக்கி எனப்படும், 'மேக்னிபையர்' மூலம் படிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். கல்லுாரியில் சேர்ந்த பின், நண்பர்களை வாசிக்கச் சொல்லி, அதை உள்வாங்கி படித்தேன்.
நான் படித்த கல்லுாரியில், 'கேம்பஸ் இன்டர்வியூ'வில் கலந்து கொண்டேன். 'உங்களுக்கு பார்வை குறைபாடா' என்று கேட்டனர். 'ஆமாம்' என்றதும், அடுத்து ஒன்றும் கேட்காமல், 'நீங்க போகலாம்' என்று அனுப்பி விட்டனர்.
படித்தவர்கள் மத்தியிலேயே, மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு இந்த அளவுக்குத்தான் இருக்கிறது. திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் படித்தபோது, 'ஆடியோ புக்' உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் உதவின. குரூப் - 2 தேர்வுக்கு தயாரான என்னை, ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.
இத்தேர்வில், மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில், மாநில அளவில் முதலிடம் பெற்று, வணிகவரி துணை அலுவலர் பதவிக்கு தேர்வாகியுள்ளேன்.
இத்தனை சவால்களுக்கு இடையிலும், அடுத்து குரூப் - 1 தேர்வையும் எழுதி, ரிசல்ட்டுக்கு காத்திருக்கிறேன்.
இந்த தேர்வு மட்டுமே என் இறுதி இலக்கு இல்லை; ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்பது தான் கனவு, லட்சியம். எந்தப் பணியில் இருந்தாலும், சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்காக உழைக்க ஆசைப்படுகிறேன்.