/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பெண்களை அறிவோட தொடர்புபடுத்தி பார்க்கணும்!
/
பெண்களை அறிவோட தொடர்புபடுத்தி பார்க்கணும்!
PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

'சொரியாசிஸ்' எனப்படும் தோல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, தன்னை போன்று பாதிக்கப்பட்ட பலருக்கும் தன்னம்பிக்கை ஏற்படுத்தி வரும் கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா: வீட்டுல மத்தவங்களோட ஒப்பிடும்போது, நான் மட்டும் ரொம்பவே கருமையுடன், குண்டாகவும் இருந்தேன். ஆனாலும், என் குடும்பத்தாரும் சரி, நண்பர்களும் சரி, என்னை வித்தியாசமா நடத்தியதில்லை.
அதனால, அழகுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காம, மனுஷங்களை மனுஷங்களா மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கேன்.எனக்கு, 17 வயசு ஆன போது தலையில் வெள்ளை வெள்ளையா செதில்கள் உதிரத் துவங்கின. பொடுகா இருக்கும்னு அதுக்கான சிகிச்சைகளை செய்திட்டுஇருந்தேன்.
ஒரு கட்டத்துல அது சரியாகாததால, தோல் டாக்டர்களை பார்த்தோம். அவங்க தான், 'இது பொடுகு இல்லை, சொரியாசிஸ்'னு கண்டு பிடிச்சாங்க. 'கூகுள்' பண்ணி பார்த்ததுல, அதுல கிடைச்ச தகவல்கள் பயத்தை கொடுத்தன.
குழந்தையா இருந்தபோது ஆஸ்பத்திரி பக்கம் தலை வெச்சுக்கூட படுக்காத எனக்கு சொரியாசிஸ் வந்ததும், ஆஸ்பத்திரி இன்னொரு வீடாவே மாறிடுச்சு. பொதுவா சொரியாசிஸ் பாதிச்சவங்க, அது வெளியே தெரிஞ்சிடாதபடி உடம்பை மறைச்சுப்பாங்க.
கண்ணாடி போன்ற சருமம் தான் அழகுன்னு நினைக்கிற பலருக்கு, 'என்னை மாதிரி சருமம் கொண்டவங்களும் இருக்காங்க. அதுவும் அழகு தான்'னு உணர்த்த நினைச்சு, என் பிரச்னை பத்தி வெளியே பேசத் துணிஞ்சேன்.
நான் பேச ஆரம்பிச்சதும், நிறைய பேர், தங்களுக்கும் அதே பிரச்னை இருக்கிறதா வெளியே சொன்னதுடன், அவமானங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துக்கவும் ஆரம்பிச்சாங்க.இந்த சமூகம், பெண்களை காட்சிப்பொருளாவே பார்த்து பழகியிருக்கு. அவங்க சரும நிறத்துல இருந்து, எல்லாமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுது.
அழகு முக்கியம், அது தான் அடையாளம்னு சொல்லி வளர்க்கப்படுற பெண்களுக்கு, சொரியாசிஸ் வந்துட்டா, அதை மறைக்கிறது பெரிய சவாலாகவும், மன அழுத்தம் தருவதாகவும் மாறுது. பெண்களை எப்ப அறிவோட தொடர்புபடுத்தி பார்க்கிறாங்களோ, அப்ப தான் இந்த மாதிரி பிரச்னைகள் மாறும். சொரியாசிஸ் என்பது தொற்று நோய் கிடையாது; ஒருத்தர்கிட்ட இருந்து இன்னொருத்தருக்கு பரவாது. சொரியாசிஸ் உள்ளவங்களை கல்யாணம் பண்ணிக்கிறதால, அவங்க பார்ட்னருக்கு அந்த பிரச்னை வராது. இந்த பிரச்னையை நிரந்தரமா குணப்படுத்த முடியாது; சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மாதிரி கட்டுப் பாட்டுல வெச்சுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களை வித்தியாசமா பார்க்காதீங்க, நடத்தாதீங்கன்னு சொல்றது தான் என் நோக்கம்.