PUBLISHED ON : செப் 24, 2025 12:00 AM

திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ: நடிகர் விஜய், பொத்தாம் பொதுவாக பேசுகிறார். அது அவருடைய நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும். முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டு பயணத்தின் வாயிலாக, தமிழகத்துக்கு, 17 ,௦௦௦ கோடி ரூபாய்க்கு, தொழில் முதலீடு வர இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார். எந்த நிறுவனம் வாயிலாக, எவ்வளவு தொகை வரப்போகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் தெரிவித்து உள்ளார். அதன்பின்னும், முதல்வரை தாறுமாறாக விமர்சித்து விஜய் பேசுகிறார்.
டவுட் தனபாலு: எதிர்க்கட்சியாக இருந்து, அரசை கேள்வியே கேட்க கூடாதுன்னா எப்படி... முதல்வர் இப்ப போயிட்டு வந்த வெளிநாட்டு பயணத்தை விடுங்க... இதுக்கு முன்னாடி பலமுறை போயிட்டு வந்ததுல, எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்திருக்கு, எத்தனை பேருக்கு வேலை கிடைச்சிருக்கு என்ற புள்ளி விபரங்களை புட்டு புட்டு வச்சு விஜய்க்கு பதிலடி தராதது ஏன் என்ற, 'டவுட்' வருதே!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்: கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்பதை நடிகர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு கூடிய கூட்டமெல்லாம் ஓட்டாக மாறவில்லை. அதாவது, நானே அதற்கு உதாரணம். கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என்பது பொதுவான விமர்சனம் தான்.
டவுட் தனபாலு: தமிழகத்தில், எம்.ஜி.ஆருக்கு பிறகு எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வந்தாங்க... அவங்களை நேர்ல பார்க்க தமிழக மக்கள் அலைமோதினாங்க... ஆனா, ஓட்டு போடலையே... தேர்தல் வர்றப்ப, தங்களை யார் ஆட்சி செய்யணும் என்பதில், தமிழக மக்கள் தெளிவாகவே இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை , சேலத்தில் உள்ள அவரது வீட்டில், தமிழக பா.ஜ., மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன் , மாநில தலைவர் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கும் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து பேசி உள்ளனர். அதற்கு பன்னீர்செல்வத்துக்கு மட்டும் இசைவு தெரிவித்த பழனிசாமி, தினகரனை ஏற்க முடியாது என கூறிவிட்டார்.
டவுட் தனபாலு: பன்னீர்செல்வத்தை மட்டும் சேர்த்து, அவருக்கு ஒரு பதவியை குடுத்துட்டா, பவ்யமா ஒரு ஓரமா இருந்துடுவாரு... தினகரன், சசிகலா தரப்பை உள்ளே சேர்த்துக்கிறது கூடாரத்துக்குள்ள ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த மாதிரி ஆகிடும் என்பதால், பழனிசாமி படுஉஷாராகவே இருக்கார் என்பதில், 'டவுட்'டே இல்லை!