PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன்: நடிகர் கமல் பல விருதுகள் பெற்றவர். அவரை போன்றவர்களே, கட்சி ஆரம்பித்து முழுமை யாக வெற்றி பெற முடியவில்லை. என்றாலும், அவரை முதல்வர் அரவணைத்து ராஜ்ய சபா எம்.பி., ஆக்கியுள்ளார். தற்போது தி.மு.க.,வை விமர்சிக்கும் விஜய்க்கும், எதிர்காலத்தில் நாம் ராஜ்யசபா சீட் தரும் நிலை வரும். தி.மு.க.,வை எதிர்த்த பலரும் இப்போது, தி.மு.க.,வில் தான் உள்ளனர்.
டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... ஒரு காலத்தில் தி.மு.க.,வை கடுமையாக எதிர்த்த சேகர்பாபு, செந்தில் பாலாஜி, ரகுபதி, சாத்துார் ராமச்சந்திரன் மாதிரி பலரும் இன்று, தி.மு.க.,வில், 'பசை'யான அமைச்சர் பதவிகளில் அமர்ந்திருக்காங்க... தி.மு.க.,வில் பாரம்பரியமாக தொடரும் உங்களை போன்றவங்க தான், 'டம்மி'யா இருக்கீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக சபாநாயகர் அப்பாவு: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொதுக்கூட்டங்களில், சினிமாவில் பேசுவது போல அகந்தையோடு பேசுகிறார். அவரது பின்புலத்தில் பா.ஜ., இருப்பது தான், அதற்கு காரணம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லி தான், அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் வாயிலாக விஜய் கட்சி துவங்கப்பட்டது. த.வெ.க.,வை பார்த்து, ஆளும் தி.மு.க., பயப்பட வேண்டிய அவசியமில்லை. இதுபோல ஆயிரம் விஜய்களை தி.மு.க., பார்த்துள்ளது.
டவுட் தனபாலு: விஜய், யார் சொல்லி கட்சி துவங்கினார்னு தெரியாது... ஆனா, அவருக்கு ஆளுங்கட்சியின் அனைத்து அமைச்சர்களும் வரிஞ்சு கட்டிட்டு பதிலடி தந்துட்டு இருக்காங்களே... நடுநிலையான சபாநாயகர் பதவியில் இருக்கும் நீங்களும், இறங்கி அடிக்கணுமா... அந்த பதவியில் இருந்து விலகி, விஜயை விமர்சித்தால், 'டவுட்'டே இல்லாம வரவேற்கலாம்!
பத்திரிகை செய்தி: நாம் தமிழர் கட்சி சார்பில் ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களை காப்போம் மாநாடு என, தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. அந்த வரிசையில், 'மலைகளின் மாநாடு' தர்மபுரியில் நடக்க உள்ளது. வரும் 27ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடக்கும் மாநாட்டில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, மலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசுகிறார்.
டவுட் தனபாலு: இந்த வரிசையில் அடுத்து, கடல்வளத்தை காப்பாற்ற மாநாடு நடத்த இருக்காங்களே... ஒருவேளை நடுக் கடல்ல, மிதக்கும் மேடை போட்டு சீமான் முழங்குவாரோ...? அவரது பேச்சை மீன்கள், ஆமைகள் எல்லாம் கேட்குமா என்ற, 'டவுட்' வருதே!