PUBLISHED ON : செப் 23, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: எந்த கொள்கை உடையவராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை தர வேண்டும். மக்கள் நீதி மய்யம் என்ற ஒரு கட்சி, திராவிடத்துக்கு எதிராக போராடுவோம் என கூறி விட்டு, இப்போது தி.மு.க.,வுக்கு அடிபணிந்து கிடக்கிறது. எம்.பி., பதவிக்காக, அக்கட்சி தலைவர் கமல், சுயநலவாதியாகி விட்டார்.
டவுட் தனபாலு: தனியா கட்சியை தொடர்ந்து நடத்திட்டு இருந்தால், ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது என்பதை கமல், 'டவுட்' இல்லாம தெரிஞ்சுக்கிட்டாரு... அதனால தான், செலவே இல்லாம ராஜ்யசபா எம்.பி.,யாகிட்டாரு... அவரது புத்திசாலித்தனத்தை பாராட்டாம, வசை பாடுவது சரியா என்ற, 'டவுட்' வருதே!
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி: தமிழகத்தில், 90 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு தரப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை தி.மு.க., அரசு முறையாக செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சாராயம் குடித்து, ஏராளமானோர் உயிரிழந்தனர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க.,வின் சாராய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
டவுட் தனபாலு: 'சாராய சாம்ராஜ்யத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்'னு சொல்றது நல்ல விஷயம் தான்... ஆனா, 'அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்ததும்'னு ஒரு கொக்கியை போடுறீங்களே... அதனால, உங்க கருத்தை அ.தி.மு.க.,வினர் ஏத்துக்குவாங்களா என்பது, 'டவுட்' தான்!
தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி: தி.மு.க.,வுக்கு கூடுவது கொள்கைக்கான கூட்டம்; மற்றவர்களுக்கு வருவது காக்கா கூட்டம். விஜய் பிரசாரம் செய்யும் பகுதியில், நாங்கள் வேண்டுமென்றே மின்சாரத்தை நிறுத்துவதாக சொல்வது பொய்யான குற்றச்சாட்டு. ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; விமர்சனங் களை வைக்கலாம், தவறில்லை. ஆனால், பக்குவமான அரசியல்வாதியாக எல்லாரும் நடந்து கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: மதுரையில் நடந்த த.வெ.க., மாநாட்டில், முதல்வரை அங்கிள்னு சொன்ன விஜய், எல்லாரும் அது தப்புன்னு சொன்னதும், இப்ப சி.எம்., சார்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாரே... இதுவே, அவர் பக்குவப்பட்ட அரசியல்வாதியா மாறிட்டார் என்பதை, 'டவுட்' இல்லாம காட்டுதே!