/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
68 ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் சிங்கப்பூர் தமிழ் இளையோர் மன்ற அரும் பணிகள்
/
68 ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் சிங்கப்பூர் தமிழ் இளையோர் மன்ற அரும் பணிகள்
68 ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் சிங்கப்பூர் தமிழ் இளையோர் மன்ற அரும் பணிகள்
68 ஆம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் சிங்கப்பூர் தமிழ் இளையோர் மன்ற அரும் பணிகள்
நவ 03, 2025

“தேமதுர தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்”
என்ற பாரதியாரின் வார்த்தைகளை வாழ்விற்கான வாக்காக எடுத்துக்கொண்டு சிங்கார சிங்கையில் பவனி வருவதே சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் (STYC) நோக்கமாகும். 1950-களின் பிற்பகுதியில் சிங்கப்பூரில் ஏற்பட்ட தீவிர அரசியல் மாற்றங்களால் சிங்கப்பூர் அரசியல் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சூழலில் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் சிங்கப்பூருக்காகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ் இளையர்களுக்காக இந்த அமைப்பு 1957- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது..
அந்தக் காலச் சூழலுக்கு ஏற்ப, இளையர் மன்றம் நாடகங்கள், தொண்டூழியம், பல சமூக முன்னெடுப்புகள் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்திற்று. இளைஞர்களின் முன்னெடுப்பால் முன்னேறிய இந்தக் குழு இடையில் பல தடைகளைச் சந்தித்தது. இருந்தாலும் மீண்டும் ஓர் சூரியனாகத் தடைக் கற்களைப் படிக்கட்டுகளாக மாற்றி இன்று கல்வியாளர் பேராசிரியர் அ.வீரமணி மற்றும் பல சிறந்த கல்வியாளர்களால் சீராட்டப்பட்டுச் சிறப்புமிக்கக் கழகமாக 68-ஆவது ஆண்டில் வெற்றி நடை போடுகிறது.
சிறந்த கல்வியாளர்களின் வழிநடத்தலும், இளைஞர்களின் இளரத்தமும் இணைந்தால் சொல்லவா வேண்டும்? தங்கள் கல்விப் படிப்பில் மட்டும் சிறந்து விளங்கினால் போதும் என்ற மனப்பான்மையை விடுத்து தமிழையும் அதன் வளர்ச்சியையும் சிந்தித்துப்பார்த்து சிங்கையில் புதுமையைப் படைக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.
குழுவின் அமைப்பு மற்றும் செயல்பாடு
இக்கழகம் தற்போது 50 தீவிரமான செயல்பாட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நிர்வாகக் குழுவில் 18 உறுப்பினர்கள் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றனர். இவர்களுக்கு 5 மதியுரைஞர்களும், 4 புரவலர்களும் உறுதுணையாக உள்ளனர்.
சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம், அதனுடைய திட்டங்களை அமலாக்கம் செய்ய 11 செயற்பாட்டுக் குழுக்களை அமைத்துள்ளது. ஒவ்வொரு குழுவும் குறிப்பிட்ட ஒரு துறையில் கவனம் செலுத்திச் செயல்படுவது, இவர்களின் வீரியமிக்க செயல்பாட்டுக்குக் காரணமாக அமைகிறது.
2025: சிறப்புமிக்க நடவடிக்கைகள்
ST200: சமூகப் பங்களிப்பை ஆவணப்படுத்தும் நூல்
சிங்கப்பூர்த் தமிழர் இருநூற்றுவர் (Singapore Tamils 200) என்னும் பெயரில், STYC முன்னெடுத்துள்ள இத்திட்டம், தமிழ் மொழி மற்றும் சமூகத்துக்குப் பங்களித்த சிங்கப்பூர்த் தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறது.
ஒவ்வொரு நூலும் சுமார் 200 தமிழர் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றையும், சமூகப் பங்களிப்பையும், குறிப்பாகச் சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பன்முகப் பணிகளையும் ஆவணப்படுத்துகிறது. இம்முயற்சியின் கீழ், இதுவரை இரு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறவேண்டிய பலர் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருவதால், இன்னும் இரு நூல்கள் விரைவில் வெளியிடத் தயராக உள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து பெருநூல்களை இளையர் மன்றம் வெளியிட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும், சிங்கப்பூரில் தமிழ் மொழியின் செழிப்பையும், தமிழர்களின் வளர்ச்சியையும் ஆவணப் படுத்துகின்றன.
தமிழ் மொழி மற்றும் சமூகத்துக்குப் பங்களித்த இந்தத் தமிழர்களின் வரலாற்றை வருங்காலச் சந்ததியினரும் கற்றறியச் செய்வதே சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பொற்கனல் (PORKANAL) - தமிழ் இளைஞர் தொடக்க விழா (Pitch Fest)
சமூகத்திற்கும் சமுதாய நலனுக்கும் பங்களிக்கும் புதிய சிந்தனைகளை இளைஞர்கள் முன்வைக்க ஒரு தளத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும். நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட இந்நிகழ்வு ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று தேசிய நூலகத்தில் நடைப்பெற்றது. இதில் இலாபத்தை மையமாகக் கொண்ட வணிக முயற்சிகளைவிட, சமுதாயம் சார்ந்த திட்டங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 16 வயதுக்கு மேற்பட்ட 30 இளைஞர்கள் 6 குழுக்களாகப் பங்கேற்று, தொழில் வல்லுநர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழுவிடம் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வுக்குப் பிந்தைய வழிகாட்டுதல் (Mentorship) அமர்வு, பங்கேற்பாளர்களுக்குத் தனிப்பட்ட கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியது, இது அவர்களின் திட்டங்களைச் செம்மைப்படுத்த உதவியது.
அரிமா (ARIMA) - தமிழ் வினாடி-வினா நிகழ்ச்சி
தமிழ் மொழியை மேம்படுத்தவும், ஊடாடும் கற்றல் (Interactive Learning) மற்றும் நட்பு ரீதியான போட்டி மூலம் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு வினாடி-வினா நிகழ்ச்சியே அரிமா. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக 26 ஜூலை 2025 அன்று நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், 9 பள்ளிகளைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, தங்கள் அறிவு, விரைவான சிந்தனை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தினர். இது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகவும் நேர்மறையான வரவேற்பைப் பெற்றது.
உச்சம் (UCHAM)
மாணவர்களுக்கு இயல், இசை, நாடகம், நடனம் ஆகியவற்றைக் கற்றுத் தரவும், அவர்களின் திறமையை வளர்க்கவும், மாணவர்களால் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த 'உச்சம்'. இந்த நிகழ்வு, 13 செப்டம்பர் 2025 அன்று தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது. இதில் 100-க்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்திப் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமில்லாமல் பரிசுகளையும் தட்டிச் சென்றனர்.
கல்வி உதவித் திட்டம் (Tuition Project)
கல்விச் சேவையை ஒரு சுமையாக நினைக்காமல், அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றம் குறைந்த கட்டணக் கல்வித் திட்டத்தை நடத்துகிறது. இது குறிப்பிட்ட மாணவர்களை மட்டும் இலக்காகக் கொள்ளாமல், குறைந்த செலவில் கூடுதல் கல்வி ஆதரவைத் தேடும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதரவளிக்கிறது. இத்திட்டம், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உறுதுணையாக இருக்கிறது.
தாக்கமும் விளைவும்
சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுத் தங்கள் திறமைகளையும் தமிழார்வத்தையும் வளர்த்துக்கொள்கின்றனர். 'உச்சம்' போன்ற நிகழ்வுகள் மாணவர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வர, 'அரிமா' போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மேலும், 'பொற்கனல்' போன்ற முயற்சிகள், இளைய சமுதாயம் சமூக மாற்றத்திற்கான ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்க்க ஊக்கமளிக்கின்ன்றன.
“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் ந்ற்றவ வானினும் நனி சிறந்தனவே'
என்று கூறினார்கள். ஆனால், சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் உறுப்பினர்கள், தங்களுடன் பிறந்த தாய்மொழியும் சிறந்தது என்று கருதி அதற்கு ஓடோடி உழைப்பதைக் காண்கையில் மனம் குளிர்கிறது.
வாழ்க சிங்கை! வளர்க தமிழ்மொழி! உயர்க தமிழ் இளையர்!
- சிங்கப்பூரிலிருந்து தினமலர் வாசகிகள் சுந்தரி, விஷாலினி
Advertisement

