PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

அமெரிக்காவுடனான நம் நாட்டின் வர்த்தக பேச்சுவார்த்தையில், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் முக்கிய முட்டுக் கடையாக இருப்பதாக கேள்விப்படுகிறோம். அமெரிக்கா கடும் அழுத்தம் தருவதாகவும், நம் நாடு இசைய மறுப்பதாகவும் செய்திகள் வருகின்றன. நம் நாட்டின் நிலைப்பாடு, உணவு பாதுகாப்பு பார்வையில் மிகவும் சிறந்தது.
இதற்கிடையில், நம் நாட்டிற்குள் இருந்தே சில பூதங்கள் கிளம்பி உள்ளன. ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், சமீபத்தில், இரண்டு நெல் ரகங்களை வெளியிட்டு உள்ளது. கமலா மற்றும் பூசா டி.எஸ்.டி., என்ற பெயர்களில் வெளியாகி உள்ள இவை, 'மரபணு திருத்த' தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாக ஐ.சி.ஏ.ஆர்., தெரிவிக்கிறது. இந்த புதிய தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கிறது.
இந்த நெல் ரகங்களை வெளியிட்ட மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், 'இவை 25 சதவீதம் அதிகம் விளையும், தண்ணீர் தேவை குறையும், பருவநிலை மாற்றத்தை உருவாக்கும் வாயுக்கள் வெளியிடுவது குறையும், உப்புத் தன்மை தாங்கி வளரும்' என்று புகழ்ந்தார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது.
முதல் கேள்வி
இந்திய சுற்றுச்சூழல் சட்டப்படி, ஒரு உயிரினத்தின் மரபணுவிற்குள் செய்யப்படும் எல்லாவித வேலைகளும் மரபணு மாற்றமே!
அதன்படி, புதிய நெல் ரகங்களை 'மரபணு மாற்றப்பட்டவை' என தான் கருத முடியும். அவற்றை, 'மரபணு திருத்தப்பட்டவை' என்று கூறுவது மோசடி வேலை தானே?
இரண்டாம் கேள்வி
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை, உயிரியல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தி, ஆபத்தில்லாதவை என்று நிரூபிக்க வேண்டும் என்கிறது நமது சட்டம். 'மரபணு திருத்தம்' என்ற வார்த்தை ஜாலத்தால், இதை தவிர்த்திருக்கிறது மத்திய அரசு.
புதிய நெல் ரகங்கள் மீது எந்த விதமான உயிரியல் பாதுகாப்பு சோதனையும் செய்யப்படவில்லை. இதனால், நாட்டின் அனைத்து மக்களும், 'மரபணு திருத்த' தொழில்நுட்பத்திற்கு பரிசோதனை எலிகளாக்கப்படுகிறார்களா இல்லையா?
மூன்றாம் கேள்வி
புதிய நெல் ரகங்கள் 25 சதவீதம் அதிக விளைச்சலை கொடுக்கும் என்கிறார்கள். ஆனால், இந்த அதிக விளைச்சல் நம் நாட்டிற்கு தேவையா? உலகளவில் நெல் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறோம். நம் தேவையை விட மூன்று மடங்கு அதிகம் உற்பத்தி செய்கிறோம்.
அரசியல் கட்டாயத்திற்காக கொள்முதல் செய்த நெல்லை என்ன செய்வதென்று தெரியாமல் மத்திய-மாநில அரசுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. நிலை இப்படி இருக்க, அதிக விளைச்சலுக்காக புதிய ரகம் என்பது, மரபணு தொழில்நுட்பத்தை நம் வேளாண்மையில் புகுத்த ஒரு சால்ஜாப்பு தானே?
நான்காம் கேள்வி
' மரபணு திருத்தப்பட்ட' நெல் ரகங்களால் தண்ணீர் தேவை குறையும், நெல் விளைச்சலின் போது வெளியேறும் மீத்தேன் வாயு குறையும் என்கிறார்கள். அரசு ஏற்கனவே ஊக்குவித்து வரும் திருந்திய நெல் சாகுபடி முறையில், தண்ணீர் தேவை 40 சதவீதம் குறைகிறது, மீத்தேன் வாயு வெளியேற்றம் 19 சதவீதம் குறைகிறது, விளைச்சலும் 25 முதல் 80 சதவீதம் அதிகரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டவை. நன்கு வேலை செய்யும் வழிமுறை கையில் இருக்க ஆபத்தான வழி எதற்கு?
ஐந்தாம் கேள்வி
புதிய நெல் ரகங்கள் உப்பு தன்மையை தாங்கி வளரும் என்கிறார்கள். உப்பு தன்மையை தாங்கி நன்கு விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள் தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் பயன்பாட்டில் இருக்கிறன. அவற்றை ஒதுக்கிவிட்டு எதற்காக மரபணு மாற்றம்?
அந்த பாரம்பரிய ரகங்கள் வேண்டாம் என்றாலும், ரசாயன விவசாயத்தால் உப்பு நிலமாக மாறிய நிலத்தை விவசாயிகளிடம் இருக்கும் எளிய நுட்பங்கள் மூலம் செய்திட இயலும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண் விற்பன்னர் நம்மாழ்வார் தலைமையிலான குழு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் மீட்டுத் தந்தது வரலாறு.
ஆறாம் கேள்வி
முதலில் அரசு நிறுவனம் வாயிலாக இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி. அதை ' சாதாரணமாக' மாற்றி. மெல்ல மெல்ல கார்ப்பரேட்களும் இந்த தொழில்நுட்பத்தில் விதைகளை வெளியிடுவதற்கான சதி வேலையோ என நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது?
இதில், மத்திய அரசும் ஒத்துப்போகிறதா அல்லது அதற்கு தெரியாமல் கார்ப்பரேட்களுடனும் பன்னாட்டு நிறுவனங்களுடனும் ஐ.சி.ஏ.ஆர்., கைகோர்த்துள்ளதா?
ஏழாம் கேள்வி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, வேளாண்மையும், மக்களின் உடல் நலனும் மாநில அரசுகளின் அதிகார வரம்பில் உள்ளவை. மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், தன்னிச்சையாக மரபணு மாற்றப்பட்ட/திருத்தப்பட்ட பயிர்களில் முடிவெடுப்பது என்பது இந்தியக் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. இருப்பினும் இந்த ரகங்கள் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டு உள்ளன. இது பற்றி மாநில அரசுகள் கேள்வி எழுப்பாதது ஏன்?
வருகிறது சுனாமி
நெல்லை தொடர்ந்து காஷ்மீரில் செம்மறி ஆட்டின் மரபணு திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக தக்காளி, கோதுமை, மக்காசோளம், கடுகு, கத்தரி உள் ளிட்ட 50 க்கும் மேற்பட்ட விவசாய மற்றும் தோட்டக் கலைப் பயிர்களை மரபணு மாற்றம் செய்து வருகிறார்கள். இவையனைத்தும் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே பெரும் சுனாமி போல் நம்மைத் தாக்கும்.
இவை எதற்கும் உயிரியல் பாதுகாப்பு சோதனை இருக்காது. மாநில அரசுகள் விழித்துக்கொண்டு குறல் எழுப்பினால் மட்டுமே இதை தடுத்து நிறுத்த முடியும். அதற்கு நாம் முதலில் விழித்துக்கொண்டு மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.