ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்: உலகிற்கு வழிகாட்டும் ருவாண்டா
ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்: உலகிற்கு வழிகாட்டும் ருவாண்டா
PUBLISHED ON : மே 06, 2026 09:27 PM

ருவாண்டா, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நிலப்பரப்பால் சூழப்பட்ட ஒரு சிறிய நாடு. இது ஆப்பிரிக்காவின் மத்தியப் பகுதிக்கும் கிழக்குக் கடற்கரைக்கும் இடையில் உள்ளது. இதன் எல்லைகளாக உகாண்டா, தான்சானியா, புருண்டி மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. ருவாண்டா மக்கள் தொகையில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர்கள் ஆவர்.

நாட்கள் நகர்ந்த பிறகு, எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்துவிட்டோம் என்று உணர்ந்த மக்கள், 'கடந்ததை மறப்போம்; இனி நடப்பதை நினைப்போம்' என்று முடிவு செய்தனர். 'நமக்குள் இனி எந்தப் பிரிவினையும் இருக்கக்கூடாது; நாம் எல்லோரும் ருவாண்டா மக்கள்' என்ற ஒரே குடையின் கீழ் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உறுதிகொண்டனர்.
அந்த முடிவைப் படிப்படியாகச் செயல்படுத்தியதன் அடிப்படையில், இன்று உலகிலேயே நாடாளுமன்றத்தில் அதிக சதவீதப் பெண்களை (60 சதவீதத்திற்கும் மேல்) கொண்ட நாடு, பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்த நாடு, உலகிலேயே தூய்மையான தெருக்களைக் கொண்ட நாடு எனப் பல உலகப் புகழைப் பெற்றுள்ளது. குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருவதால், இது 'ஆப்பிரிக்காவின் சிங்கப்பூர்' என்றும் அழைக்கப்படுகிறது.
இப்போது இன்னுமொரு உலகப் புகழையும் ருவாண்டா பெற்றுள்ளது. போர்க்கால எச்சங்களாக நிலத்தில் புதைந்திருந்த கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு விபத்துகளால் உறுப்புகளை இழந்த இளைஞர்களுக்கு ஆதரவு தருவதன் மூலம், பெரும் பெருமையும் பெற்றுள்ளது.
உடல் ஊனமுற்றோருக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் ருவாண்டா அணிதான் (குறிப்பாகப் பெண்கள் அணி) இப்போது முன்னோடியாகவும் முதன்மை பெற்றதாகவும் விளங்குகிறது. இந்த வீரர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்துப் பயிற்சி அளித்ததன் மூலம், சிறந்த கால்பந்தாட்ட வீரர்களைக் கொண்ட அணியாக உலகம் முழுவதும் வலம் வந்து நாட்டிற்குச் சிறப்பு சேர்க்கின்றனர். ஆப்பிரிக்க மாற்றுத்திறனாளிகள் கால்பந்து கோப்பை போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் இவர்கள், தற்போது சர்வதேசப் போட்டிகளுக்காகத் தயார் செய்யப்படுகின்றனர்.
ஊனத்தை உத்வேகமாக மாற்றிய ருவாண்டா வீரர்களின் பயணம் உலகிற்கே ஒரு சிறந்த பாடமாகும்.
-எல்.முருகராஜ்
