ADDED : ஜூன் 14, 2026 09:16 AM

ப ட்ஸ் வச்சு, காது குடைவது சுகமான அனுபவமாக இருக்கலாம்... ஆனால் அது அவசியமற்றது; ஆபத்தானது என்கிறார் ராயல் கேர் மருத்துவமனையின் காது அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர் மோகன்குமார்.
மேலும் அவர் கூறியதாவது:
பிறந்த குழந்தைகளுக்கு காது கேட்கிறதா இல்லையா என்பதை குழந்தையின் பேச்சுத் திறன், கவனிப்பை வைத்து அறிய முடியும். இதற்கான காது கேட்கும் பரிசோதனையை அரசு கட்டாயமாக்கியுள்ளது. 3 மாதங்களுக்குள் பரிசோதனை செய்தால் காது கேளாத குறைபாட்டை அறிந்து சிகிச்சை அளித்து சரி செய்ய முடியும்.
காது கேட்காத குழந்தைகளால் வாய் பேசவும் முடியாது. பேச இயலாத குழந்தைகளுக்கு காது கேட்காமல் இருக்கலாம். 3 மாத குழந்தைகள் முதல் 3வயது வரை காக்ளியர் இம்ப்ளான்ட் கருவியை பொருத்தி, இயல்பான நிலையில் கேட்க வைக்க முடியும். 6 வயதுக்குள் கருவியை பொருத்தினால் கேட்கும் திறனை பெற முடியும்.
ஆறுவயதுக்கு பின் அறுவை சிகிச்சை செய்வது பயனளிக்காது.
காது கோளாறு ஏற்பட நெருங்கிய சொந்தங்களில் திருமணம், மரபணு ரீதியான கோளாறுகள், கர்ப்ப காலத்தில் காய்ச்சல், அம்மை, பொன்னுக்கு வீங்கி, விபத்து போன்றவை காரணிகளாக இருக்கும்.
வளர்ந்த குழந்தைகளின் கேட்கும் திறன் இழப்பிற்கு, காய்ச்சல், வைரஸ் பாதிப்பு, நோய் எதிர்ப்பு தன்மை இல்லாதது காரணிகளாக இருக்கலாம். எந்த வயதிலும் கேட்கும் திறனை இழந்தால் மீண்டும் அதை பெற முடியும்.
அதற்கான மருத்துவ அறுவை சிகிச்சைகள் உள்ளன. காதுக்கு பின்பகுதியிலோ அல்லது வெளிப்புறமாகவோ அறுவை சிகிச்சையால் கருவியை பொருத்தி, தெளிவான கேட்கும் திறனை பெற முடியும்.
காதுகளை குடைய பஞ்சிலான குச்சிகளை (பட்ஸ்), சாவி, எண்ணெய் போன்றவைகளை பயன்படுத்த கூடாது. காதுக்குள் இயல்பாகவே சுரக்கும் திரவமே காதுகளை பாதுகாக்கின்றன. மருத்துவர்கள் தவிர, வேறு யாரும் காதுகளை சுத்தம் செய்வதை தவிருங்கள்.
காது கேட்கும் திறன் பரிசோதனை பல மருத்துவனைகளிலும் உள்ளன. ஆனால், குழந்தைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்து கருவியை பொருத்தும் மருத்துவமனை, தமிழ்நாட்டில் ஒரு சில மட்டுமே உள்ளன. இதில் ஒன்று தான் கோவை ராயல் கேர் மருத்துவமனை. இதற்கான சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களையும், பணியாளர்களையும் கொண்டுள்ளது. சிகிச்சைக்கு பின் தொடர் கண்காணிப்பு, ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
