தாய்லாந்தில் யோகா போட்டி சாம்ராஜ் நகர் மாணவர் சாதனை
தாய்லாந்தில் யோகா போட்டி சாம்ராஜ் நகர் மாணவர் சாதனை
ADDED : ஏப் 30, 2026 11:49 PM

- நமது நிருபர் -:
தாய்லாந்தின் பட்டாயாவில் நடந்த இந்தோ - தாய் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், சாம்ராஜ்நகரை சேர்ந்த 14 வயது மாணவர் முதலிடம் பெற்று, மாநிலத்துக்கு பெருமை சேர்த்தார்.
இந்தோ - தாய் கலா யோகாசனம் விளையாட்டு மற்றும் கலாசார அகாடமி சார்பில் தாய்லாந்து நாட்டின் பட்டாயாவில், ஏப்., 23 முதல் 25ம் தேதி வரை 8 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான யோகாசனம் போட்டி நடந்தது.
இதில், சாம்ராஜ் நகரின் அத்வைத் நாயக், மைசூரின் ருசித் தேவர், ரஜத் கிரி, இலங்கை, கம்போடியா, தாய்லாந்தை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
ஏப்., 25ல் நடந்த இறுதி போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், சாம்ராஜ் நகரின் அத்வைத் முதலிடம் பிடித்து, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாநிலத்துக்கு பெருமை சேர்த்த அத்வைத் நாயக், சாம்ராஜ் நகர் மாவட்டம் எலந்துாரின் எலகேரியை சேர்ந்த குரு - மமதா தம்பதியின் மகன். எட்டாம் வகுப்பு படித்து வரும் அத்வைத்துக்கு, சிறு வயதில் இருந்தே ஆன்மிகம், யோகா, நடனத்தில் ஆர்வம் இருந்துள்ளது.
இதை பார்த்த அவரது தந்தை, கோடைகாலத்தில் மைசூரில் உள்ள யோகா பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைத்தார். யோகாவை முழு ஈடுபாடுடன் கற்றுக் கொண்டார்.
அத்வைத்தின் பயிற்சியாளர் ராவ்னிகர் கூறுகையில், ''அத்வைத், துமகூரு யோகாசன விளையாட்டு மற்றும் கலாசார அகாடமி போட்டியில் பரிசு வென்றுள்ளார். மேலும், அவர் யோகா, தியானம், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வருகிறார். அவர் படிப்பிலும், பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு யோகாசனங்களை வெற்றிகரமாக பயிற்சி செய்து, பாராட்டப்பட்டு உள்ளார். எதிர்பார்த்தபடியே அவர் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
