ADDED : ஏப் 30, 2026 11:48 PM
- நமது நிருபர் -:
ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 19வது சீசன், நமது நாட்டின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த 18வது சீசனில் ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு முன்பு 17 சீசனில் அந்த அணி ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை என்றாலும், அணிக்கு ஆதரவாக பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது.
ரசிகர்கள் கிண்டல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல்., துவங்கும் போது, ஆர்.சி.பி., ரசிகர்கள், 'ஈ சாலா கப் நம்தே' அதாவது இந்த முறை கோப்பை நமக்கு தான் என்று சொல்வதும்; கோப்பையை வெல்ல முடியாமல் போகும் போது, மற்ற அணி ரசிகர்களின் கேலி, கிண்டல்களை சந்திப்பதும் வழக்கமாக நடந்தது.
கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று, ஆர்.சி.பி., அணி பெங்களூரு வந்த போது, சின்னசாமி மைதானம் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். இது ஆர்.சி.பி., அணிக்கு கரும்புள்ளியாக மாறியது. அதுவரை ஆர்.சி.பி., அணிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ரசிகர்கள், அணி நிர்வாகத்துக்கு எதிராக பேச ஆரம்பித்தனர்.
இந்த ஆண்டு ஐ.பி.எல்., போட்டி துவங்கும் முன்பு, பெங்களூரில் போட்டிகள் நடக்குமா என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் 14 போட்டிகளில் 7 போட்டிகளை, சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி., அணி விளையாடும்.
ஆனால் இம்முறை 5 போட்டிகள் மட்டும் விளையாட ஒப்பு கொண்டனர். சின்னசாமியில் 5 போட்டிகளை விளையாடி முடித்து விட்டனர். மொத்தமாக இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 வெற்றியுடன், புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இதனால் ஆர்.சி.பி., அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
டி - ஷர்ட் விற்பனை கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், ஆர்.சி.பி., அணி பைனலுக்கு செல்லும்; இம்முறையும் கோப்பையை வெல்லும் என்கின்றனர். 'ஈ சாலா கப் நம்தே' கோஷமும் மீண்டும் உருவெடுத்து உள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் ஐ.பி.எல்., ஜுரம் தொற்றி உள்ளது.
ஆட்டோ டிரைவர்கள் முதல் பெரிய வாகனங்கள் ஓட்டுபவர்கள் வரை; டீ கடை முதல் ஷாப்பிங் மால் வரை எங்கு பார்த்தாலும் ஐ.பி.எல்., பற்றிய பேச்சு தான் உள்ளது. ஆர்.சி.பி., அணி வீரர்கள் பெயர் பொறித்த டி ஷர்ட்டுகள் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.
