காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது; ஐநா பகீர் குற்றச்சாட்டு
காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது; ஐநா பகீர் குற்றச்சாட்டு
ADDED : செப் 16, 2025 05:10 PM

நியூயார்க்: காசாவில் இஸ்ரேல் இனப் படுகொலை செய்து உள்ளது என ஐ.நா. விசாரணை கமிஷன் தெரிவித்து உள்ளது.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்; 251 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது. இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ள இந்தப் போரில், இதுவரை 62,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
போர், இரண்டரை ஆண்டுகளை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. போரை முடிவுக்கு கொண்டு வர பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அதேநேரத்தில், பசி, பட்டினியால் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழக்கும் அவலம் காசாவில் தொடர்கிறது.
இந்நிலையில், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல், இனப்படுகொலையை செய்வதாக ஐநாவின் விசாரணை கமிஷன் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இது குறித்து ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் மெரோன் கூறுகையில்,' இந்த அறிக்கை போலியானது. ஹமாஸ் படையினரால் எழுதப்பட்டது. பொய்யான அவதூறுகளை பரப்புகின்றனர்' என்றார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேலில் இனப்படுகொலைக்கு முயன்றது ஹமாஸ் ஆகும். 1,200 பேரைக் கொன்றது, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது. பல்வேறு குடும்பங்களை உயிருடன் எரித்தது. மேலும் ஒவ்வொரு யூதரையும் கொல்லும் இலக்கை ஹமாஸ் படையினர் வெளிப்படையாக அறிவித்தனர்.
வேறு எந்த நாடும் இந்த நிலைமைகளில் செயல்பட்டு போர்க்களத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் தீங்குகளைத் தடுக்க இவ்வளவு செய்ததில்லை. இந்த அறிக்கை ஆதாரமற்றது. இஸ்ரேல் தனது மக்களைப் பாதுகாத்து, பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டு வர முயற்சிக்கிறது.
யூத அரசைக் குறை கூறுவதிலும், ஹமாஸின் அட்டூழியங்களை மூடி மறைப்பதிலும், பாதிக்கப் பட்டவர்களைக் குற்றம் சாட்டப் பட்டவர்களாக மாற்றுவதிலும் ஐநா விசாரணை கமிஷன் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது