ஆப்பரேஷன் சிந்தூரில் துண்டாடப்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம்: பயங்கரவாதி ஒப்புதல்
ஆப்பரேஷன் சிந்தூரில் துண்டாடப்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம்: பயங்கரவாதி ஒப்புதல்
ADDED : செப் 16, 2025 03:46 PM

இஸ்லாமாபாத்: இந்தியா ஆயுதப்படைகள் நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம் இந்திய படைகளால் துண்டாடப்பட்டதாக அந்த அமைப்பின் பயங்கரவாதி ஒப்புக் கொண்டுள்ளான்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு கொடூரமாக கொலை செய்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து நமது ஆயுதப்படைகள், ' ஆப்பரேஷன் சிந்தூர் ' நடவடிக்கையை துவக்கியது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது மற்றும் லஷகர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புகளை தாக்கி அழித்தனர். மேலும் அந்நாட்டின் பயங்கரவாத நடவடிக்கைளுக்கு பயன்படுத்தப்படும் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் குடும்பமும் கொல்லப்பட்டது. ஆனால், இந்த தாக்குதலில் இருந்து அவன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அவன், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடமாடியதை உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவன் மசூத் அசார். ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான இவன், 2016 ம் ஆண்டு பதன் கோட் விமானப்படை தளம் மீது நடந்த தாக்குதல், 2019 புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவன்.
இந்நிலையில், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தளபதியாக செயல்படும் மசூத் இலியாஸ் காஷ்மீரி என்ற பயங்கரவாதி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவன் கூறியுள்ளதாவது: பயங்கரவாதத்தை தழுவி, டில்லி, காபூல் மற்றும் காந்தகாரில் பாகிஸ்தானை பாதுகாக்க சண்டையிட்டுள்ளோம். அனைத்தையும் இழந்த பிறகு, மே 7 ம் தேதி மவுலானா மசூத் அசாரின் குடும்பத்தை பஹவல்பூரில் இந்திய படைகள் துண்டாடிவிட்டன எனக்கூறியுள்ளான்.