எச்1பி விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம்; அமெரிக்க நிறுவனங்கள் தலையில் விழுந்த பேரிடி!
எச்1பி விசாவுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம்; அமெரிக்க நிறுவனங்கள் தலையில் விழுந்த பேரிடி!
UPDATED : செப் 21, 2025 08:53 AM
ADDED : செப் 20, 2025 07:44 AM

வாஷிங்டன்: எச்1பி விசாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அமெரிக்கா அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார். ''தற்போது 'எச்1பி' விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்'' என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் தற்போது எச் 1 பி விசா விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி டிரம்ப் அறிவித்து இருக்கிறார்.
புதிய விதிகள் படி, எச் - 1 பி விசாவில் ஒருவருக்கு பணி அளிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்காக 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்) கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இந்த உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். தற்போது 'எச்1பி' விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்திட வேண்டி இந்த திட்டத்தை டிரம்ப் அறிமுகப்படுத்த உள்ளார்.
டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு செப்.,21 முதல் அமலுக்கு வருகிறது. இதனால் மைக்ரோசாப்ட், ஜேபி மார்கன், அமேசான் நிறுவனங்கள், தங்களது எச்1பி விசா ஊழியர்களை அமெரிக்காவில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் ஊழியர்கள், உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்னதாக உடனடியாக அமெரிக்காவுக்கு வந்து விட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டின் முதல் அரையாண்டில் அமேசான் நிறுவனம், 12 ஆயிரம் ஊழியர்களுக்கு எச்1 பி விசா பெற்றுள்ளது. பேஸ்புக் உரிமையாளரான மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் தலா 5 ஆயிரம் ஊழியர்களுக்கு எச்1 பி விசா பெற்றுள்ளன.
டிரம்ப் விதித்துள்ள ஒரு லட்சம் ரூபாய் கட்டணம் காரணமாக, அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விசாவால் அதிகம் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசாக்களில் கடந்தாண்டு 70 சதவீதம் விசாக்களை இந்திய வல்லுனர்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹெச் 1 பி விசா, க்ரீன்கார்டு முறையை மாற்றுவோம் என அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவார்டு லுட்னிக்கடந்த ஆகஸ்ட் மாதம் கூறியது குறிப்பிடத்தக்கது.