ADDED : செப் 20, 2025 06:19 AM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில், 'ஸ்கூபா டைவிங்' செய்த அசாமை சேர்ந்த பிரபல பாடகர் ஸூபின் கார்க், 52, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
வடகிழக்கு மாநிலமான அசாம் திரைத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாக புகழ்பெற்ற பாடகராக திகழ்ந்தவர் ஸூபீன் கார்க். அசாம், பெங்காலி, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு திரைப்படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
வடகிழக்கு விழாவில் பங்கேற்க சிங்கப்பூர் சென்ற அவர், 'ஸ்கூபா டைவிங்' எனப்படும், ஆழ்கடல் நீச்சலில் ஈடுபட்டார். அப்போது ஸூபினுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2:30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 'ஸூபின் கார்க் மறைவு இசை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு' என, பிரதமர் மோடி, அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.