உக்ரைன் மக்களை சித்தரவதை செய்வதா? ரஷ்யாவுக்கு ஐநா கண்டனம்
உக்ரைன் மக்களை சித்தரவதை செய்வதா? ரஷ்யாவுக்கு ஐநா கண்டனம்
ADDED : செப் 23, 2025 06:50 PM

நியூயார்க்: ரஷ்ய அதிகாரிகள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளில் மக்களை பாலியல் தொந்தரவு உட்பட சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் என ஐநா குற்றம் சாட்டி உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு முதல் ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையிலான போர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், உக்ரைன் மீதான ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் ஒரே இரவில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் பல உக்ரைன் ட்ரோன்கள் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது படையெடுப்பை நிறுத்தாததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது மூன்று ஏவுகணைகள் மற்றும் 115 ட்ரோன்களை ஏவியது என்று கியேவின் விமானப்படை தெரிவித்துள்ளது. பெரும்பாலான ட்ரோன்கள் வான் பாதுகாப்பு மூலம் இடைமறிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா மீது நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை உக்ரைன் முடுக்கிவிட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ரஷ்ய அதிகாரிகள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளில் மக்களை பாலியல் தொந்தரவு உட்பட சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பிப்ரவரி 2022ல் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, ரஷ்யா சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்களின் தொடர்ச்சியாக உக்ரைன் மக்களை கைதிகளாக வைத்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.