ADDED : செப் 12, 2025 08:22 AM

ஹூஸ்டன்: அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவருடன் பணியாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் பகுதியில் உணவக மேனேஜராக பணியாற்றி வந்தவர் சந்திர நாகமல்லையா,50. இவருக்கும், அவரின் கீழ் பணியாற்றி வந்த கோபோஸ் -மார்டினெஸ்,37, என்பவருக்கும் பணியின் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பழைய வாஷிங்மெஷினை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில், மனைவி மற்றும் மகன் முன்னிலையில் நாகமல்லையாவை தலை துண்டித்து கொன்றுள்ளான் மார்டினெஸ்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளி கோபோஸ் மார்டினெஸை கைது செய்தனர். விசாரணையில், தன்னுடன் பேசுவதற்கு மொழி பெயர்ப்பாளரை நாகமல்லையா அணுகியதால், கோபம் ஏற்பட்டு கொலை செய்ததாக குற்றவாளி கூறியுள்ளான். மேலும், அவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் ஹூஸ்டனுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்து கொடுப்பதாகவும், கொலையாளி டல்லாஸ் நகர போலீசாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.