சாகா வரம் பெறுவது எப்படி; ஜி ஜின்பிங்- புடின் பேசிக்கொண்ட சுவாரஸ்யம்!
சாகா வரம் பெறுவது எப்படி; ஜி ஜின்பிங்- புடின் பேசிக்கொண்ட சுவாரஸ்யம்!
ADDED : செப் 04, 2025 08:57 AM

பீஜிங்: பீஜிங்கில் நடந்த ராணுவ அணிவகுப்பின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், ஆயுளை நீடிப்பது குறித்து பேசிக்கொண்ட சுவாரஸ்ய வீடியோ வெளியாகி உள்ளது.
இரண்டாம் உலகப் போர், 1939 செப்.,1ல் துவங்கி, 1945 செப்., 2ல் ஜப்பான் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, செப்., 3ம் தேதியை வெற்றி தினம் என்ற பெயரில் சீனா ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், 80வது வெற்றி தினத்தையொட்டி, நம் அண்டை நாடான சீனாவின் பீஜிங்கில் பெரிய அளவிலான ராணுவ அணிவகுப்புன் நேற்று நடந்தது. இதுபோன்ற பிரமாண்ட பேரணி, 10 ஆண்டுக்கு முன் நடத்தப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தோளோடு தோள் சேர்ந்து நடந்து சென்றபோது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்து இருப்பது ஹாட் மைக்கில் (Hot mic) பதிவாகியுள்ளது.
ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வின் சிசிடிவி ஒளிபரப்பை ஆன்லைனில் 1.9 பில்லியன் பேரும், தொலைக்காட்சியில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்ததாக சீனாவின் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடன் அரங்கத்தை நோக்கி நடந்து சென்றபோது, புடினின் மொழிபெயர்ப்பாளர் சீன மொழியில் உயிர் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது என்று கூறுவதைக் கேட்க முடிந்தது.
பயோ டெக்னாலஜி தொழில்நுட்ப மேம்பாடு மூலம் பழுதாகும் மனித உடல் உறுப்புகளை அவ்வப்போது மாற்றிக் கொள்ள முடியும். இப்படி தொடர்ந்து உடல் உறுப்புகளை மாற்றிக் கொண்டே வருவதன் மூலம், எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்கிறீர்களோ அதனை காட்டிலும் உங்கள் உடலை இளமையாக இருக்க வைக்க முடியும். கடைசியில் சாகாவரமும் பெற்று விடலாம்.
பதிலுக்கு, கேமராவுக்கு வெளியே இருந்த ஜி ஜின்பிங் சீன மொழியில் பதிலளிப்பதைக் கேட்கலாம்: 'இந்த நூற்றாண்டில் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழலாம் என்று சிலர் கணித்துள்ளனர்', என்றார். இதற்கு வட கொரியா அதிபர், புடின் சிரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. புடின் ரஷ்ய மொழியில் பேசுவதைத் தெளிவாகக் கேட்க முடியவில்லை.
இந்த விஷயத்தை நானும், சீன அதிபர் ஜி ஜின்பிங்யும் விவாதித்ததாக ரஷ்ய அதிபர் புடின் உறுதிப்படுத்தினார். மேலும் அவர், 'நவீன மருத்துவ மேம்பாட்டு வழிமுறைகள்,, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கூட, இன்றைய நிலையை விட சுறுசுறுப்பான வாழ்க்கை தொடரும் என்று நம்ப வைக்கின்றன,' என தெரிவித்தார்.