ADDED : செப் 23, 2025 07:32 PM

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கான்வாயை, அதிபர் டிரம்ப் செல்வதற்காக போலீசார் தடுத்து நிறுத்தினர்.
நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அமெரிக்கா சென்றுள்ளார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிறகு, பிரான்ஸ் தூதரகத்துக்கு காரில் கிளம்பி சென்று கொண்டு இருந்தார். அப்போது, அதிபர் டிரம்ப் அந்த வழியாக செல்வதால் போக்குவரத்தை நியூயார்க் போலீசார் நிறுத்தினர். அதில், மேக்ரான் கான்வாயையும் நிறுத்தினர். இதனால் கோபம் அடைந்த மேக்ரான் காரை விட்டு இறங்கி போலீசிடம் விசாரித்தார். அதிபர் டிரம்ப் செல்வதற்காக நிறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சாலையில் இருந்தவாறே மேக்ரான், அதிபர் டிரம்ப்புக்கு போனில் அழைத்து பேசினார்.
அப்போது அவர், டிரம்ப்பிடம், ' எப்படி உள்ளீர்கள். உங்களுக்காக சாலைகள் மூடப்பட்டதால், நான் தெருவில் நின்று கொண்டு இருக்கிறேன்,' எனக்கூறினார். தொடர்ந்து நடந்து சென்றவாரே டிரம்ப்பிடம் மொபைல்போனில் பேசினார்.
அப்போது பாதசாரிகள், மேக்ரானுடன் செல்பி எடுத்தனர். ஒரு நபர் அவருக்கு முத்தம் கொடுத்தார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.