காசாவில் இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு பொய்: இஸ்ரேல் பிரதமர்
காசாவில் இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டு பொய்: இஸ்ரேல் பிரதமர்
UPDATED : செப் 26, 2025 10:35 PM
ADDED : செப் 26, 2025 10:27 PM

ஐக்கிய நாடுகள்: '' காசாவில் இனப்படுகொலை செய்வதாக இஸ்ரேல் மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய். அதற்கு ஆதாரமில்லை. காசாவில் உணவுப்பொருட்களை ஹமாஸ் அமைப்பினர் திருடுகின்றனர்,'' என ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகு பேசியதாவது: ஒட்டுமொத்த உலகின் அமைதிக்கும் ஈரான் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏமனில் உள்ள ஹவுதிக்கள் பாதிபேர் கொல்லப்பட்டனர். காசாவில் ஹமாசின் யாஹ்யா சின்வரும், லெபனானில் ஹசன் நசரல்லாவும் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் ஆசாத் ஆட்சி வீழ்த்தப்பட்டு உள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துபவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். ஈரானின் மூத்த ராணுவ கமாண்டர்கள், அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும். அதனை செய்தால் நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். இல்லைஎன்றால் இஸ்ரேல் உங்களை வேட்டையாடும்.பொது வெளியில் எங்களுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள், தனிப்பட்ட முறையில் எங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலை நிறுத்தும் அளவுக்கு உளவுத்துறை உள்ளதாக பாராட்டுகின்றனர்.
அமெரிக்காவும், ஈரானும் பொதுவான அச்சுறுத்தலை சந்திப்பதை மற்ற தலைவர்களை விட டிரம்ப் புரிந்து கொண்டுள்ளார். அமெரிக்கர்களை பிணைக்கைதிகளாக பிடித்து மிரட்டும் போது, அதற்கான என்ன விலை கொடுக்கவேண்டியிருக்கும் என்பதை அவர் காட்டினார்.
இனப்படுகொலை என தவறான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அப்பாவி மக்கள், பெண்கள் மீது வேண்டுமென்றே தாக்குவதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை. காசா மக்களுக்கு இஸ்ரேல் உணவு வழங்கம்போது, அந்நாட்டு மக்களை பட்டினியில் ஆழ்த்துவதாக எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. காசா மக்களுக்கு போதிய உணவு இல்லை என்றால் அதற்கு ஹமாஸ் அமைப்பினர் உணவுப்பொருட்களை திருடுவதே காரணம். அதனை பதுக்கி, விற்பனை செய்து போர் செய்வதற்கான செலவுக்கு பயன்படுத்துகின்றனர்.
பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சில நாட்டு தலைவர்கள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளனர். அக்.,7 ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் செய்த அட்டூழியத்தை பார்த்த பிறகும் அவர்கள் அதனைச் செய்துள்ளனர். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம். இவ்வாறு நெதன்யாகு பேசினார்.
வெளிநடப்பு
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் பிரதமர் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல நாட்டு பிரதிநிதிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் சார்பி்ல மூத்த அதிகாரிகளுக்கு பதில் கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இதனால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக காணப்பட்டன.