எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார் விஜயபாஸ்கர்
ADDED : ஜூன் 17, 2026 06:33 AM

சென்னை: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வில் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையிலும், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி தலைமையிலும், கோஷ்டிகள் உருவாகின. இதில், வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தமிழக வெற்றி கழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு அளித்தனர்.
கட்சி கொறடா உத்தரவை மீறி, த.வெ.க.,விற்கு ஆதரவளித்த இவர்களை தகுதி நீக்கம் செய்ய, பழனிசாமி தரப்பில் சபாநாயகர் பிரபாகரிடம் கடிதம் தரப்பட்டது. அவர்களில், நான்கு பேர் பதவியை ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் இணைந்தனர்.
மன்னிப்பு இந்நிலையில், 21 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க கடிதத்தை வாபஸ் பெறுவதாக, சபாநாயகரிடம் பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதை ஏற்று, 21 பேருக்கு மன்னிப்பு வழங்கியதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், விராலிமலை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் நேற்று தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்தார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் வெளியிட்ட அறிக்கையில், 'விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், தனது பதவி விலகல் கடிதத்தை, தன் கைப்பட எழுதி, என்னிடம் அளித்தார். கடிதம் முறையாக உள்ளதால், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்' என, கூறப்பட்டு உள்ளது.
கட்சியிலிருந்து விலகல் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதற்கு முன், விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கை:
தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால், நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது, மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையை சுமந்தபடி என் பயணத்தை தொடர்வது, சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன். நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து.
வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம் போல தொடரும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், புதுக்கோட்டை, கறம்பக்குடி, அறந்தாங்கி உட்பட பல பகுதிகளில், விஜயபாஸ்கர் விலகலை வரவேற்று, பழனிசாமி ஆதரவு அ.தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து, மக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடினர்.
