மத்திய அரசின் ஏதாவது ஒரு திட்டத்தை ஸ்டாலின் வரவேற்றுள்ளாரா; நயினார் நாகேந்திரன் கேள்வி
மத்திய அரசின் ஏதாவது ஒரு திட்டத்தை ஸ்டாலின் வரவேற்றுள்ளாரா; நயினார் நாகேந்திரன் கேள்வி
ADDED : செப் 24, 2025 12:01 PM

சென்னை; மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்பதில்லை என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய அரசின் மக்கள் விரோத திட்டம் என்ன என்பதை அவர் சொல்ல வேண்டும். மக்களுக்கு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை இலவசமாக கொடுக்கிறோம். அத்தனையும் மத்திய அரசு தரும் பொருட்கள்.அதில் மாநில அரசின் பங்கு ஒன்றுமே கிடையாது. அது மக்கள் விரோதமா? விவசாயிகளுக்கு வருடத்திற்கு 4 தடவையாக ரூ.6000 தருகிறோம். அதுவும் மக்கள் விரோத திட்டமா? பிரதமர் மோடி அரசின் வீடு கட்டும் திட்டத்தில் மாநில அரசின் பங்கு இருக்கிறது. அதை மறுக்க முடியாது.
அதிலும் 37 லட்சம் பேருக்கு கொடுத்துக் கொண்டு இருந்தனர். மத்திய அரசு பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக இப்போது கட்டுப்பாட்டில் வைத்து, அதை 19, 20 லட்சமாக குறைத்திருக்கின்றனர். இது விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்யும் மிக பெரிய துரோகம். அதை மறுக்க முடியாது.
மக்கள் விரோத திட்டம் என்று சொல்கிறீர்களே? இதில் எந்த திட்டம் அப்படியானது என்பதை முதல்வரிடம் நீங்கள் போய் கேட்கணும். எந்த மத்திய அரசின் திட்டத்தையும் முதல்வர் வரவேற்று பேசி உள்ளாரா? இதுவரைக்கும் கிடையாது.
ஜிஎஸ்டி வரிகுறைப்பில், எல்லா வரியிலும் தமிழகத்துக்கு 50 சதவீதம் பங்கு இருக்கிறது. பாதிப்பு என்று கூறுவது தவறானது. ஜிஎஸ்டியில் மத்திய அரசின் நேரடி வரிவிதிப்பு என்று எதுவுமே கிடையாது. எல்லா மாநில நிதியமைச்சர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர்களின் ஒப்புதலோடு தான் இதுவரை இந்தியாவில் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது.
ஜிஎஸ்டியின் ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்தில் வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தனர். மக்களுக்கு சுமை அதிகமாகிறது என்று பல்வேறு தரப்பினரிடம் வந்த கோரிக்கையின் அடிப்படையில் 28 சதவீதம் என்பதை எடுத்துவிட்டார்.
பிறகு, 12 சதவீதத்தில் கிட்டத்தட்ட 90 பொருட்களின் விலையை 5 சதவீதமாக குறைத்து விட்டனர். சில பொருட்களுக்கு வரியை ஜீரோ சதவீதமாக குறைத்து விட்டனர். இதில் மக்களுக்கு நன்மை இருக்கிறதா? இல்லையா? இதை எல்லாம் முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 50 சதவீதம் மாநில அரசுக்கு பங்கு இருக்கிறது. மீதி இருப்பதில் தான் சாலை போட வேண்டும். இன்றைக்கு நான்குவழி, எட்டு வழி சாலை யார் போடுகின்றனர்? மத்திய அரசு தான் செய்கிறது.
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் தான் நாடு முன்னேறும். சாலை, மானம், கப்பல் போக்குவரத்துக்கு மத்திய அரசு நிதி தருகின்றனர். இதை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜ தேசிய தலைவர் நட்டா வரும் 6ம் தேதி எம்ஜிஆர் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர், புதுச்சேரி சென்று அங்கிருந்து டில்லி செல்கிறார்.
தமிழகத்தை பொறுத்த வரை திமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வருவதில்லை. உதாரணமாக ஜிஎஸ்டியில் எல்லாவற்றையும் விலை குறைத்தோம்.ஆனால் ஆவினில் அவர்களால் விலையை குறைக்க முடியவில்லை. போராட்டம் என்று சொன்னவுடன் விலையை குறைத்தார்கள்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.